வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010
இளைய பாரதம் ஏற்றுவோம்!
நாம் தற்போது இருப்பது “இளைஞர்களின் யுகம்”. எண்ணிலடங்காத ஆற்றல் கொண்ட இளைஞர்களைத்தான், விவேகானந்தர் முதல் அப்துல் கலாம் வரை உலகத் தலைவர்கள் அனைவரும் போற்றி வந்துள்ளனர். “எல்லாவற்றையும் இழந்த பின்னரும் ஒன்று மிச்சம் இருக்கும். அது எதிர்காலம்” என்ற ஒரு பொன்மொழி எனக்கு மிகவும் பிடிக்கும். நம் வாழ்க்கையே, அந்த எதிர்காலம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் நடந்து கொண்டிருக்கிறது. அந்த எதிர்காலம் இருப்பதோ இளைஞர்கள் கைகளில் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், உணர்ந்திருக்கிறோமா? இளைஞர்களைத் தேவையான பொழுது உற்சாகப்படுத்துகிறோமா..? சரியான பாதைகளில் வழிநடத்துகிறோமா..? அவர்களுக்கு உரிய மதிப்பையும், முக்கியத்துவத்தையும், அங்கீகாரத்தையும் வழங்குகிறோமா..? – யோசி!
கடந்த வாரம்தான், எல்லா நாட்களையும் போல வழக்கமான முறையில், ஆகஸ்டு 12-ஆம் தேதியும், எந்த ஆரவாரமும் இன்றி நம்மைக் கடந்து போனது. அதன் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்தோமா? ஆகஸ்டு 12-ஆம் தேதி, சர்வதேச இளைஞர் தினம். அந்த நாளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கொண்டாட்டங்களும், பயனுள்ள நிகழ்வுகளும் ஏதும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. ஏனென்றால், நமக்கு அது முக்கியமாகத் தெரியவில்லை. சரி. போனது போகட்டும். இனி எப்படி? – யோசி!
1998-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை, போர்ச்சுகல் நாட்டின் தலைநகர் லிஸ்பனில், இளைஞர் நலனுக்குப் பொறுப்பான அமைச்சர்களின் உலக மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 12-ஆம் தேதியை சர்வதேச இளைஞர் தினமாக அறிவிக்கலாம் என்று பரிந்துரை செய்யப்பெற்றது. 1999-ல் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, இந்தப் பரிந்துரையை ஏற்று அவ்வாறே அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, 2000-ஆம் ஆண்டு முதல், ஆகஸ்டு 12-ஆம் தேதி “சர்வதேச இளைஞர் தினம்”-ஆகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இளைஞர் தினத்தை, ஆண்டுதோறும் ஒரு மையக் கருத்துடன் ஐ.நா.சபை கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டுக்கான மையக்கருத்து “கலந்துரையாடல் மற்றும் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளுதல்” என்பதாகும். இதனடிப்படையில், பல கருத்தரங்குகளும், நிகழ்வுகளும் நடைபெறும்.
இந்தத் தகவல்கள் மட்டுமல்ல. இன்னும் ஒரு இனிப்பான செய்தி. இளைஞர்களுக்கு, இந்த ஆண்டு மிகவும் முக்கியமான, சிறப்பான ஆண்டாகும். ஏனென்று தெரியுமா?
இந்த ஆகஸ்டு 12 தொடங்கி, வரும் அடுத்த ஓராண்டை, அதாவது ஆகஸ்டு 2011 வரையில், “சர்வதேச இளைஞர் ஆண்டாக”, ஐ.நா. சபை அறிவித்துள்ளது. இதையொட்டி, இந்த ஆண்டு முழுவதும், உலகெங்கும் ஏராளமான நிகழ்ச்சிகளும், போட்டிகளும், கருத்தரங்குகளும், கலந்துரையாடல்களும், மாநாடுகளும் நடைபெற உள்ளன. நாமும் இந்தக் கொண்டாட்டங்களில் பங்கெடுக்க வேண்டாமா..? உலகிலேயே மிக அதிகமான எண்ணிக்கையில், இளைஞர்களைப் பெற்றுள்ள, நம் இந்திய நாடு, இந்த ஓராண்டினை, இளைஞர்களை முன்னேற்றுவதற்கும், நல்வழி காட்டுவதற்கும், நம்பிக்கை அளிப்பதற்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டாமா..? – யோசி!
இவை மட்டுமல்ல. உலக வரலாற்றிலேயே முதன் முறையாக, உலகமே கொண்டாடும் உற்சாகத் திருவிழாவாக, இளையோருக்கான சிறப்பு ஒலிம்பிக் போட்டிகள், தற்போது சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. சாதாரண உள்ளுர் போட்டிகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் கூட, இந்த உலகப் போட்டிகளுக்கு, நம் ஊடகங்களால் வழங்கப்படவில்லை என்பது வேதனை தருகிறது.
அதிலும், இந்தியர்கள், இன்றுவரை (ஆகஸ்டு 19, 2010) மூன்று பதக்கங்களை வென்றுள்ளனர். பாட்மின்டனில் சுனில் குமார் வெள்ளிப் பதக்கம், மல்யுத்தத்தில் பூஜா வெள்ளிப் பதக்கம், கடியன் வெண்கலப் பதக்கம் என – மொத்தம் மூன்று. மேலும், டென்னிஸில், இந்தியாவின் யுகி பாம்ப்ரி, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று, ஒரு பதக்கத்தை உறுதி செய்திருக்கிறார். அப்படியிருந்தும், இவர்களை யாரும் பாராட்டவில்லை. இந்தச் செய்திகளை எந்த ஊடகமும், உரிய முக்கியத்துவம் தந்து வெளியிடவில்லை.
என்ன ஆயிற்று நமக்கு? சாதனை செய்த சில நூறு இளைஞர்களை சரியான முறையில் ஊக்குவித்தால் தானே, இன்னும் ஆயிரம், லட்சம், கோடி என இளைஞர்கள் ஏராளமான சாதனைகளைப் படைக்க முடியும்.
சமூகம் இந்த இளைஞர்களின் மீது தான் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்கும், இளைஞர் சக்தியைக் கொண்டாடுவதற்கும், உற்சாகப்படுத்துவதற்கும், அதன் மூலம் இளைஞர்கள் தங்கள் ஆற்றலை உணர்ந்து கொள்வதற்கும், தங்கள் ஆற்றலை சமுதாயத்திற்குப் பயனுள்ள வழிகளில் பயன்படுத்த முனைவதற்கும், தங்கள் முன்னேற்றத்திற்கான முட்டுக்கட்டைகள் குறித்து விழிப்புணர்வு பெறுவதற்கும், அந்த முட்டுக்கட்டைகளைத் தங்கள் வெற்றியின் படிக்கட்டுகள் ஆக்குவதற்கான வழிகள் குறித்து ஆய்வு செய்வதற்கும், இதுவே ஏற்ற தருணம்.
“எங்கள் ஆண்டு – எங்கள் குரல்” என்ற ஐ.நா. சபையின், இந்த இளைஞர் ஆண்டுக்கான மையக் கருத்து, ஒவ்வொரு இளைஞனின் உள்ளக் கருத்தாகட்டும். உலகெங்கும், இளைஞர்களின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்! அதிலும், இந்திய இளைஞனின் குரலே மற்றவர்களை வழி நடத்தட்டும்! அதற்கு அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், பெரியவர்களும், ஊடகங்களும் நிறைய பாராட்டுகளையும், நிறைவான வசதிகளையும் அவர்களுக்கு வழங்கட்டும்!
இளைஞர்களுக்கு உரிய வாய்ப்பளிப்போம்! வரவேற்போம்! அதன் மூலம் இந்தியாவை வளப்படுத்துவோம்! வலுப்படுத்துவோம்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக