இன்றைய சூழலில் நாம் எல்லோருமே மாற்றத்தைப் பற்றித்தான் அதிகம் சிந்தித்தும், பேசியும், எழுதிக் கொண்டும் இருக்கிறோம். இந்த உலகில் மாறாத ஒன்றே ஒன்று மாற்றம் மட்டுமே என்று நாம் அனைவரும் அறிவோம். அப்துல் கலாம் முதல் அமெரிக்க அதிபர் ஒபாமா வரை எல்லோரும் மாற்றத்தின் அவசியத்தை, மாற்றமே ஏற்றம் தரும் என்ற நம்பிக்கையை உலகெங்கும் பரப்பி வருகிறார்கள். அதில், கடந்த சில நாட்களில் நிகழ்ந்த இரு முக்கிய நிகழ்வுகள், மாற்றத்தின் ஊற்றாய்த் தொடங்கியுள்ளன. அவை வெள்ளமாகிப் பெருகிப் பரவப், பல ஆண்டுகள் ஆகும் என்ற போதிலும், எதையும் செய்யாமல் இருப்பதை விட, செயல்படத் தொடங்குவது சிறந்தது என்பதால், அந்த நிகழ்வுகள் என்னை அதிகம் சிந்திக்க வைத்தன.
ஒன்று, தேர்தலில் வாக்களிக்க, இளைஞர்கள் காட்டிய ஆர்வம். மற்றொன்று, அன்னா ஹசாரோயின் உண்ணாவிரதம். இரண்டு நிகழ்வுகளையும், உற்று நோக்குவோம்! சிந்தையில் அவற்றை, சற்று தேக்குவோம்!
தமிழக வரலாற்றில் அதிகமான வாக்குப் பதிவு! “தேன் வந்து பாயுது காதினிலே” என்கிற அளவுக்கு மகிழ்ச்சியான செய்தி. அதிலும், இந்தத் தேர்தலில், இளைஞர்கள் வாக்களிக்க முனைந்து ஆர்வம் காட்டியது, கூடுதல் மகிழ்ச்சி. இன்றைய (16-4-11) தினமணி நாளிதழின் தலையங்கத்தில் கூறியுள்ளது போல, இளைஞர்கள் அனைவரும் மாறிவிட்டார்கள் என்றோ, மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றோ, அரசியல் மாற்றத்திற்கான மாதிரிகள் ஆகிவிட்டார்கள் என்றோ நாம் உறுதியாகச் சொல்ல முடியாது என்றாலும், குறைந்தபட்ச ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்னும் ஆர்வமே, நிச்சயமாக வரவேற்கத் தகுந்த மாற்றம்தான்.
ஆனால், மாற்றம் முழுமையடைய, நாடு ஏற்றம் பெற, இளைஞர்கள் தங்கள் சக்தியை உணர வேண்டும். அதை, சரியான திசைகளில் திருப்ப வேண்டும். அறிவு வளர்ச்சி, கொஞ்சம் பொது நலம் நோக்கியும் மாற வேண்டும். இளைஞர்கள் வாக்களித்தது மட்டுமே போதுமானது அல்ல. அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள், எந்த அடிப்படையில் அல்லது எதை முன்னிலைப்படுத்தி வாக்களித்தார்கள், அவர்களின் வாக்கை முடிவு செய்வதில் எது (ஊடகங்கள் போன்றவை) அல்லது யார் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது போன்ற பல கோணங்களும் நம் கவனத்திற்கு உரியது. உண்மையில், இவைதான், ஒரு நல்ல மாற்றத்திற்கான வழியினைத் தரும். சுய சிந்தனை உடையவர்களாகவும், யாராலும் அல்லது எதனாலும் வழிநடத்தப் பெறாதவர்களாகவும், சாதி, மதம், இனம், பணம், பதவி, புகழ், அதிகாரம் போன்ற எந்தக் குறுகிய சிந்தனையும் இல்லாதவர்களாகவும் இருந்தால்தான், வருங்காலத்திலாவது ஒரு நல்ல மாற்றம் வரும். அதுவே, நமக்கெல்லாம் இன்பம் தரும்.
அடுத்தது, அன்னா ஹசாரே! தனிமனிதர் ஒருவரின் உண்ணாவிரதம், தேசத்தையே எழுச்சி கொள்ளச் செய்தது என்பது, என் வாழ்வில், நான் நேரடியாகப் பார்த்த முதல் அனுபவம். கோவையில் நடைபெற்ற மாபெரும் ஊர்வலம், “மிஸ்டு கால்” பங்களிப்புகள், எங்கெங்கு காணினும் மக்களிடையே விவாதப்பொருளாக மாறிய ஆச்சரியம் என, அரசியல் பலமும், பண பலமும் இல்லாமல், தானாகவே ஒரு நல்ல செய்தி, ஊழலுக்கு எதிரான எண்ணம், பொது மக்களிடையே இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியது, நல்லதோர் மாற்றத்தின் ஊற்றாகவே எனக்குத் தெரிந்தது.
அன்னாவின் கோரிக்கையை அரசு ஏற்றது குறித்த செய்தியைப் படித்துக் கொண்டே என் நண்பர் என்னிடம் கேட்டார், “ஒரு தனிமனிதன் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை இது நிரூபித்து விட்டது அல்லவா?” என்று. நான் புன்னகையுடன் சிந்தித்தேன். பல்லாண்டு காலமாக, தனிமனித மாற்றமே சமூக மாற்றம் என்றும், தனிமனித முன்னேற்றமே, தேச முன்னேற்றம் என்றும், தீவிரமாக நம்பிக்கொண்டும், பிரச்சாரம் செய்து கொண்டும் இருக்கும் என்னை, அன்னாவின் வெற்றி யோசிக்க வைத்தது. உண்மையிலேயே, இது வெற்றி என்றோ, தனிமனிதனின் வெற்றி என்றோ, நான் கருதவில்லை. பிரபலங்களின் ஆதரவு, ஊடகங்களின் ஒத்துழைப்பு போன்ற பலவும் இந்தக் காரியத்தைச் சாத்தியமாக்கி உள்ளன. மேலும், எல்லோரும் அறிந்துள்ளபடி, இது முழுமையான வெற்றி அல்ல. ஒரு நல்ல தொடக்கம்.
ஏனென்றால், ஒரு தனிமனிதரின், உண்மையான, பொதுநலம் சார்ந்த, அமைதிவழிப் போராட்டம், இந்த நாட்டை மாற்றிவிட முடியுமா என்றால், சந்தேகம்தான். அப்படியிருந்தால், சில நாட்கள் போராட்டத்திலேயே அன்னா அரசாங்கத்தை வழிக்குக் கொண்டு வர முடியும் போது, கடந்த 10 ஆண்டுகளாக, இராணுவப் படைச்சட்டத்தைத் திரும்பப் பெறச் சொல்லி உண்ணாவிரதம் இருக்கும் சர்மிளா சானுவின் போராட்டம் இன்னும் ஏன் வெற்றி பெறவில்லை? – யோசி!
என்னைப் பொறுத்தவரை, இந்த இரண்டு நிகழ்வுகளுமே, ஊடகங்களால் பெரிதாக்கிக் காண்பிக்கப்படும் பிம்பங்கள்தான்! அதில் மகிழ்ச்சிக்குரிய செய்தி என்னவென்றால், எப்போதுமே, தவறான, தேவையற்ற, எதிர்மறை நிகழ்வுகளையே மிகைப்படுத்தித், தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொள்ளும் ஊடகங்கள், நேர்மறையான, நம்பிக்கை ஊட்டக் கூடிய நிகழ்வுகளுக்கு, முக்கியத்துவம் அளித்துள்ளதுதான்!
இந்த இரு நிகழ்வுகளையும், மாற்றத்தின் ஊற்றுகளாகவும், நம்பிக்கை ஒளியின் கீற்றுகளாகவுமே நானும் காண்கிறேன். ஆனால், இதில் அதிகமாகப் பூரித்து, தேங்கி விடக் கூடாது என்பதே எனது வேண்டுகோள். நிலாவைப் பார்த்துவிட்டதால் மட்டுமே, நாம் நிலவுக்குப் போய்விட்டதாக எண்ணிவிடக் கூடாது. அதற்குத், தொடர்ச்சியான முயற்சி தேவை. அற்ப சந்தோ~ங்கள், நமக்கு, சில நாட்கள் மகிழ்ச்சி தரலாம். ஆனால், முழுமையான மன நிறைவடைய, நல்வாழ்வு பெற, நாம் இந்த நிகழ்வுகளையும் தாண்டி, தொடர்ந்து உழைக்க வேண்டும்.
லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் சர்ச்சில் உள்ள புகழ்பெற்றவர்களின் கல்லறைகளில் ஒன்றில், இருப்பதாக அறியப்படும் வாசகம்.
“நான் சிறுவனாக இருக்கும்போது, இந்த உலகத்தையே மாற்ற வேண்டும் என்று விரும்பினேன். வளர்ந்து பெரியவனான பின்தான், எனக்குத் தெரிந்தது, இந்த உலகத்தை என்னால் மாற்ற முடியாது என்று. என்னுடைய நாட்டையாவது மாற்றிவிட வேண்டும் என்று நினைத்தேன். அதற்காகப் பலவாறும் முயற்சித்தேன். எனக்குத் திருமணம் ஆகிக், குழந்தைகளும் பிறந்துவிட்டார்கள். பல ஆண்டுகளுக்குப் பின்தான் எனக்குத் தெரிந்தது, என்னால் இந்த நாட்டை மாற்ற முடியாது என்று. என் குடும்பத்தையாவது மாற்றிவிட வேண்டும் என்று முடிவு செய்தேன். அவர்களுக்குப் பலவாறும் உபதேசித்தேன். என் குழந்தைகள், பெரியவர்களான பின்தான் எனக்குத் தெரிந்தது, என்னால் என் குடும்பத்தையும் மாற்ற முடியாது என்று. நான் இறக்கும் தருவாயில்தான் எனக்குப் புரிந்தது, என்னால் யாரையுமே மாற்ற முடியாது. ஏனென்று சொன்னால், கடைசிவரை நான் மட்டும் மாறவே இல்லை. நான் மாறியிருந்தால், என்னை உதாரணமாகக் காட்டி, என் குடும்பத்தையும், என் குடும்பத்தை உதாரணமாக வைத்து நாட்டையும், யார் கண்டது, ஒரு வேளை இந்த உலகத்தையே கூட நான் மாற்றியிருக்கக் கூடும்!”
இந்த வாசகம் போல்தான், உலகம் மாற வேண்டுமானால், மாற்றம் நம்மிடமிருந்தே தொடங்க வேண்டும். நாம் மாறாமல், யாரையும் மாற்ற முடியாது. எல்லோரும் உள்ள அளவில் மாறாத வரை எதுவுமே மாறாது. தலைவர்களையும், வழிநடத்துபவர்களையும், பெருந்திரள் கூட்டங்களையும், ஊடகங்களால் மிகைப்படுத்தப்படும் நிகழ்வுகளையும் தேடுவதை விட்டுவிட்டு, தனிமனிதன் ஒவ்வொருவரும் மாற வேண்டும். இந்த நிலையிலும், பணம் தரும் கட்சிக்காரனும், பணம் பெறும் வாக்காளனும் நம்மிடையில் இருப்பதை, நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும்! ஒவ்வொருவரும் அவரவர்களை, நாட்டு நலன் நோக்கி, மனதை மாற்றிக் கொண்டாக வேண்டும்!
ஒரு நாள் நிச்சயம் விடியும்! அது நம்மால் மட்டுமே முடியும்! அந்த நம்பிக்கையோடு... அடுத்த கட்டுரையில் சந்திக்கிறேன்...
சனி, 16 ஏப்ரல், 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)