வியாழன், 31 மார்ச், 2011

தேர்தலும் தேர்வும்

ஆண்டுதோறும், மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சூரியனின் காய்ச்சல் சற்று அதிகமாகவே இருக்கும். வெயிலின் கொடுமையால், சும்மா இருக்கும்பொழுதே, நம் உடலிலும் காய்ச்சல் வந்தது போலிருக்கும். இந்த லட்சணத்தில், இந்த ஆண்டு, ஒரே நேரத்தில் மூன்று காய்ச்சல்கள் நம்மை ஆட்டுவிக்கிறது. பாடாய்ப் படுத்துகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் காய்ச்சல், தேர்தல் காய்ச்சல் மற்றும் தேர்;வுகளால் வரும் காய்ச்சல் ஆகியனதான் அந்த மூன்றும்! இந்தக் கட்டுரையில், தமிழகம் முழுவதும் அனேகம் பேருக்குப் பொருந்தும், நம் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் தேர்தல் மற்றும் தேர்வுகள் குறித்து சிந்திப்போம்!

பெயரின் எழுத்துகளிலும், ஒலியிலும் மட்டுமல்லாது தேர்தலுக்கும் தேர்வுக்கும்தான் எத்தனை ஒற்றுமைகள்! தேர்தலில் நிச்சயமாகத் தேர்வு உண்டு! போட்டியிடுபவர்களில் ஒருவரை, வாக்காளர்கள் தேர்வு செய்கின்றனர். விண்ணப்பிக்கின்ற பலரில் ஒருவரைக், கட்சி தேர்வு செய்கின்றது. சில கட்சிகளில், விண்ணப்பித்தவர்களுக்கு எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வும் நடைபெறுகிறது. பல நேரங்களில் வேட்பாளர்கள் பலருக்கு, அந்தத் தேர்தலே, வாழ்க்கையின் மிகப்பெரிய தேர்வாகி விடுகிறது. தேர்விலும் நிச்சயம் தேர்தல் இருக்கத்தான் செய்கிறது. எல்லாத் தேர்விலும், மாணவர்கள் குறிப்பிட்ட வினாக்களைத் தேர்ந்துதான் விடையளிக்கிறார்கள். அதில் தேர்ந்தால்தான் அவர்களால் அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியும் என்பது நம் கல்வித் திட்டம்.

தேர்தல், தேர்வு என்னும் வார்த்தைகளின் பொருள்களை வைத்து மட்டும் சொல்லவில்லை. உண்மையிலேயே எண்ணிப் பாருங்கள் - இரண்டும் எவ்வளவு பொருத்தமானவை என்று!

தேர்தல், மற்றும் தேர்வுகள் இரண்டினாலுமே, நம் அன்றாட அலுவல்கள் பாதிக்கப்படுகிறது. இரண்டையுமே குறித்து நாம் அனைவரும் அதிகம் விவாதிக்கிறோம். தேர்வு எழுதுபவர்களோ, தேர்தலில் நிற்பவர்களோ நம் வீட்டில் இல்லை என்ற போதும், அவை குறித்து அதிகம் சிந்திக்கிறோம். விவாதிக்கிறோம். ஊடகங்கள் அவை குறித்து வெளியிடும் அத்தனையையும் கவனிக்கிறோம். இல்லையா..?

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, குறிப்பாக பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, அந்தத் தேர்வு, அவர்களின் எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிப்பதில் பெரும் பங்காற்றுகின்றது. அதேபோல்தான், பல தேர்தல்கள், அந்தத் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களின் வருங்காலத்தைத் தீர்மானிப்பதில் பெரும்பங்காற்றுகின்றன.

தேர்வு எழுதும் மாணவர்கள் மட்டுமல்லாது, அவர்களது பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் எனப் பல தரப்பினரும் அதிகமான மன அழுத்தமும், கவலையும் அடைகிறார்கள். தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் மட்டுமல்லாது, அவரது கட்சியினர், அதிகாரிகள், தேர்தல் ஆணையம், காவல்துறை எனப் பல தரப்பினரும் அதிகமான மன அழுத்தமும், கவலையும் அடைகிறார்கள். மேலும் இவர்கள் அனைவருக்கும் வேலைப் பளுவும் அதிகமாகிறது.

தேர்வுகளின் போது, படிக்கின்ற ஒவ்வொரு மாணவனின் இன்றியமையாக் கடமையான தேர்வுகளை, எழுதாமல் இருப்பதற்கு அல்லது ஒழுங்கான முறையில் எழுதாததற்கு, மாணவர்கள் எண்ணற்ற காரணங்களை அடுக்குகிறார்கள். தேர்தலிலும் கூட, ஒவ்வொரு குடிமகனின் இன்றியமையாக் கடமையான வாக்களிப்பதை, செய்யாமல் இருப்பதற்கு அல்லது வாக்களிக்காமல் இருந்ததற்கு, நாம் ஒவ்வொருவரும் ஏராளமான காரணங்களை வைத்திருக்கிறோம்.

தேர்தலின் போது, பணம் கொடுத்து ஓட்டுகள் பெறப்படுவதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழும். தற்போதெல்லாம், தேர்வுகளிலும் கூடப், பணம் கொடுத்து மதிப்பெண்கள் பெறும் முயற்சிகள் பல இடங்களிலும் நடக்கிறது. தேர்தலில் லஞ்சம், வன்முறை போன்ற பல தவறான செய்கைகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன. தேர்வுகளிலும், காப்பியடித்தல், பிட் அடித்தல் போன்ற பல தவறான செய்கைகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன. தேர்தல், தேர்வு இரண்டிலுமே, தவறான செய்கைகளைத் தடுப்பதற்காக, சிறப்புப் படைகள் அமைக்கப்படுகின்றன. ஆனால், இரண்டிலுமே, முழுமையாகத் தவறுகளைக் களைய முடியவில்லை.

இப்படியே, எண்ணிக் கொண்டு போனால், தேர்தல், தேர்வு என இரண்டிற்கும் இடையே எண்ணிலடங்கா ஒற்றுமைகள் உள்ளன. ஆனால்... ஒரு முக்கியமான வேற்றுமை உண்டு. தேர்வின் முடிவுகள், மற்ற எல்லாரையும் விட, எழுதியவர்களைத்தான் அதிகம் பாதிக்கும். ஆனால் தேர்தல் முடிவுகள், தேர்தலில் போட்டியிட்டவரை விட, பொதுமக்கள் அனைவரையும் அதிகமாகப் பாதிக்கும்.


தேர்வு என்பது தனிப்பட்ட ஒருவரின் வாழ்வை மட்டுமே பாதிக்கக் கூடியது. அதுவும் ஓரளவிற்குத்தான். தேர்வில் ஒருவர் தேரவில்லையென்றாலும், அவரால் வாழ்வில் நிச்சயமாக சாதிக்கமுடியும். ஆனால், தேர்தல் அப்படியல்ல. அதன் முடிவுகள் ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கக் கூடியது. ஓட்டுப்போட்டவர், ஓட்டுப்போடாதவர், கட்சி சார்ந்தவர், நடுநிலையாளர், பணக்காரன், ஏழை, படித்தவர், படிக்காதவர், இளைஞர், முதியவர், ஆண், பெண் என்ற எந்தவிதமான பேதமும் இன்றி எல்லாரையும் பாதிக்கக்கூடியது.

எனவே, வருகின்ற ஏப்ரல் 13-ஆம் நாள், தமிழக சட்டமன்றத் தேர்தலில், நம் தேர்வு சரியானதாக அமைய வேண்டும். அந்தத் தேர்வே, நமது ஐந்தாண்டு கால வாழ்வைத் தீர்மானிக்க உள்ளது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். தேர்தலில், எனது முக்கியமான வேண்டுகோள்கள் மூன்று.

முதலாவது, எந்தக் காரணம் சொல்லியும், ஓட்டளிக்காமல் இருந்து விடாதீர்கள். எல்லாக் காரணங்களும், நம் கடமையைச் சரியாகச் செய்யாமல் இருப்பதற்கான சாக்குப்போக்குகள்தான். நம் கடமையைச் சரியாகச் செய்யாத நாம், மற்றவர்கள் (அரசியல்வாதிகள், அதிகாரிகள், ...) அவர்கள் கடமையைச் சரியாகச் செய்யவில்லை என்று சொல்வதற்கான தகுதியவற்றவர்கள் என்பதை உணருங்கள். நம் ஒருவரின் வாக்கு, நம் தொகுதியின்... அவ்வளவு ஏன்... ஒருவேளை நம் மாநிலத்தின் தலையெழுத்தையே தீர்மானிக்க வல்லது என உணருங்கள்.

இரண்டாவது, வாக்கு என்பது நம்முடையது. நம் விருப்பப்படிதான் அவை அளிக்கப்பட வேண்டும். உணவகத்தில், நிறையப்பேர் சாப்பிடுகிறார்கள் என்பதற்காக, நாமும் அதையே சாப்பிடுவது சரியல்ல. நாம் விரும்பும் உணவையே உண்ண வேண்டும். அதுதான், நமது விருப்பம். மற்றவர்கள் அனைவரும் ஆலோசனை சொல்லலாம். ஆனால் முடிவு நம்முடையதாக இருக்க வேண்டும். வாக்களிக்கும்போது ஜாதி, இனம், மதம், கட்சி போன்ற நம் சொந்த லாபங்களுக்கு இடமளிக்காதீர்கள். ஏனெனில், நம் ஒருவரின் வாக்கு, அனைவரின் வாழ்வையும் பாதிக்கும் என்ற சமூகக் கடமையுணர்வோடு வாக்களியுங்கள். குறிப்பாக பணம், பொருள் அல்லது இலவசம் பெற்றுக்கொண்டு வாக்களிக்காதீர்கள். நம் வாக்குகளை எதற்காகவும், யாருக்காகவும் விற்றுவிடாதீர்கள். எனவே, உற்றார், உறவினர், அக்கம்பக்கத்தினர், கட்சிகளைச் சார்ந்தவர்கள், இவர்களை எல்லாம் விட முக்கியமாக, ஊடகங்கள் என எவர் சொல்வதைக் கொண்டும், முடிவெடுக்காதீர்கள். நம் எல்லோருக்கும் ஆறு அறிவு உள்ளது. நாட்டுக்கு, நம் தொகுதிக்கு நல்லது எது என சொந்தமாக யோசித்து, ஆராய்ந்து வாக்களியுங்கள். உங்கள் வாக்கு ரகசியமானதாக மட்டுமல்ல, உங்களுடையதாக இருக்கட்டும்.

மூன்றாவது, நல்ல வேட்பாளரைத் தேர்ந்தெடுங்கள். நமக்குப் பிடித்த அல்லது நாம் ஆட்சிக்கு வர வேண்டும் என்று எண்ணும் கட்சிக்கு அல்ல. எனவே, ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டுப்போடுவேன் என்று, தன் மடமையைத், தம்பட்டம் அடித்துக்கொள்ளாதீர்கள். அப்படிச் சொல்வதற்கு நாம் ஒன்றும் பச்சோந்திகளோ, அரசியல்வாதிகளோ இல்லை. வேட்பாளர்தான், நமக்காகப் பாடுபடப் போகிறவர். அவர் எந்தக் கட்சியாக இருந்தாலும், நல்லவர் நிச்சயம் நமக்கும் நல்லது செய்வார். ஆனால், எந்தக் கட்சியும், நமக்கு, நம் தொகுதிக்கு ஒன்றும் செய்யாது. தேர்வு செய்யப் பெற்றவர்கள் வேறு, வேறு கட்சிகளாக இருந்தால், அவர்கள் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்கட்டுமே! நமக்கென்ன! தேர்தலுக்குப் பின் கூட்டணி என்பது இதுவரை நடைபெறாததா என்ன?

இந்த மூன்று வேண்டுகோள்களையும் சிந்தித்து, ஏற்று, நல்ல வேட்பாளர்களை நாம் தேர்ந்தெடுத்தால், இந்தத் தேர்தலில் நாமும் தேர்வோம்! நாடும் தேறும்!