வெள்ளி, 17 செப்டம்பர், 2010

சடங்குகளா..? சங்கடங்களா..?

சடங்குகள், சம்பிரதாயங்கள், விழாக்கள், நம்பிக்கைகள்... இன்னும் எத்தனை பெயர்களில் சொன்னாலும், அவை எல்லாம் மனிதனை நெறிப்படுத்தவும், மகிழ்ச்சிப்படுத்தவும்தான் தோன்றின. ஆனால், இன்று நாம் உண்மையிலேயே எல்லா சடங்குகளையும், விழாக்களையும் மகிழ்ச்சியோடுதான் கொண்டாடுகிறோமா? நம் கொண்டாட்டங்களால் உண்மையிலேயே எல்லாரும் மகிழ்வாகத்தான் இருக்கிறார்களா? – யோசி!

நான் எப்போதும் சொல்வதுண்டு – நாம் பல முற்காலக் கருத்துகளையும், பழக்க வழக்கங்களையும் அரைகுறையாக அல்லது தவறாகத்தான் பின்பற்றி வருகிறோம் என்று. அதை நிரூபிக்கும் வகையில்தான் தினந்தோறும் எத்தனை நிகழ்ச்சிகள்...!

மிக அதிகமான (சுமார் 40) இலக்கிய அமைப்புகளையும், ஏராளமான அறிஞர்கள், பேச்சாளர்கள், கவிஞர்களையும் கொண்ட நகரமாகிய எங்கள் புதுக்கோட்டையிலேயே, தற்போதெல்லாம் அதிகமாக இலக்கிய நிகழ்வுகளைப் பார்க்க முடியவில்லை. நடக்கின்ற சில நிகழ்வுகளிலும் கூட்டம் அதிகம் இருப்பதில்லை. காரணம் - எல்லாமே வெறும் சடங்காக, சம்பிரதாயமாக நாம் பின்பற்றுவதுதான்.

இலக்கிய விழாக்களில் இலக்கியத்தைத் தவிர மற்றவை குறித்துப் பேசுவதும், ஜனரஞ்சகம் என்ற பெயரில் தரம் தாழ்ந்து பேசுவதும், காரியம் ஆவதற்காக சில பெரிய்...ய (?) மனிதர்களை ரொம்ப ஓவராகப் புகழ்வதும், சிலர் சொல்லி வைத்தாற்போல் ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொள்வதும், மிகச் சிலரே எல்லா மேடைகளையும் ஆக்கிரமித்துக் கொள்வதும், எப்போதும் தாமதமாகத் தொடங்கித் தாமதாகவே நிறைவு செய்வதும், பார்வையாளர்களுக்குப் பிடிக்கிற மாதிரி பேசுகிறேன் என்ற போர்வையிலும், கைதட்டல் பெறுவதற்காகவும் பொருத்தமில்லாத, கேட்பவர்களைக் குழியில் தள்ளுகின்ற கருத்துகளைப் பேசுவதும், தமக்குப் பிடிக்காதவர்களை நாகரிகமின்றி விமர்சனம் செய்யப் பொது நிகழ்வுகளைப் பயன்படுத்திக் கொள்ளுவதும்.................................................................... அப்பப்பா! இந்தக் கூத்துகளை எல்லாம் எழுதினால் எனக்கு நூற்றுக்கணக்கில் பக்கங்கள் தேவைப்படும் - அதைப் பிறகு பார்க்கலாம். இப்போதைக்கு, மேற்சொன்ன பல காரணங்களால், அந்த விழாவிற்கு உரிய, தேவையான பல அடிப்படைகள் தகர்க்கப்பட்டுவிட்டதை மட்டும் நாம் கவனத்தில் கொள்வோம்.


இலக்கிய விழாக்கள் மட்டும்தான் என்றில்லை! ஆன்மிக விழாக்கள் இதைவிட மோசமான நிலையில் உள்ளன. எனக்குப் பல நாட்களாகப் புரியாத புதிர்களாக, கோயில் அல்லது சாமி பெயரில் நடக்கும் விழாக்கள் உள்ளன. கோயில் திருவிழா என்றால் கரகாட்டம் அல்லது நடன நிகழ்ச்சி என்ற பெயரை வைத்து நடக்கும் மிட்நைட் மசாலாக்கள், திருட்டு விசிடி போட்டால் தப்பு என்பதால், திருட்டு தியேட்டரே நடத்தும் அளவுக்குப் புதிய திரைப்படங்கள், இசை நிகழ்ச்சி என்ற பெயரில் ஆபாசமான பாடல்கள், பால்குடங்கள், காவடிகள், அலகு குத்தியவர்கள், கடவுள் சிலைகளின் ஊர்வலங்கள் எல்லாவற்றின் முன்னாலும், குடித்துவிட்டு கேவலமான முறையில் குத்தாட்டம்... என்ன செய்து கொண்டிருக்கிறோம் நாம்?

கடவுளை நினைத்து மனமுருக வேண்டிய வேளைகளிலும், பொழுது போக்க நினைக்கிறோம். அடுத்த கட்டம் பொழுது போக்கு என்ற பெயரில் மனதையும், உடலையும், ஊரையும் கெடுக்கிறோம். எனக்கு கடவுள் பக்தி உண்டு. ஆனால், ஒரு நாளும் இவையெவற்றையும் செய்ததில்லை. தமிழ் சினிமாவின் நிகழ்கால பக்திப் படங்கள்தான் மக்களிடையே கடவுள் நம்பிக்கையைக் கேலிக்குள்ளாக்கி வருகிறது என்று நினைத்தால், நமது செய்கைகள் எல்லாமே அப்படித்தான் இருக்கிறது.

ஏற்கனவே, பகுத்தறிவு என்ற பெயரில் நாத்திகவாதம் தலைதூக்கி வருகிறது. அதற்கு நமது மூட நம்பிக்கைகள் மட்டும் காரணம் அல்ல. நம்மிடையே பக்தி அதிகரித்தும், ஒழுக்கம் குறைந்தும் காணப்படுவதும்தான். இந்த நிலையில், இதையெல்லாம் சரிசெய்ய வேண்டாமா? – யோசி!

பொது விழாக்கள் மட்டுமல்லாது, குடும்ப விழாக்களும் குலைந்து போனதுதான் என்னை இக்கட்டுரையையே எழுதத் தூண்டியது. எல்லாமே வெறும் கடமைக்காக, சடங்காக ஏன் மாறிப்போனது? – யோசி!

சமீபத்தில் உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக சென்னை சென்றிருந்தேன். லட்சக்கணக்கில் செலவழித்து ஏசி மண்டபம் பிடித்திருந்தார்கள். மலர் அலங்காரம், மேடை அலங்காரம், விருந்துகள் என்று எல்லாமே மிக ஆடம்பரமாகவும், அருமையாகவும் செய்திருந்தார்கள். ஆனால், வெளியூரில் இருந்து வந்த விருந்தினர்கள் எல்லாரும் தங்குவதைப் பற்றி மட்டும் கண்டுகொள்ளவே இல்லை. சென்னையின் அந்த புறநகர்ப் பகுதியில், ஆட்டோ, டாக்ஸி கிடைப்பது கூட மிக அரிதாக இருந்தது. நகரில் ஒரு லாட்ஜில் தங்கினால், மண்டபத்திற்கு செல்ல சுமார் ஒன்றரை மணிநேரம் ஆகும். இதில் மிகப் பெரிய கொடுமை என்னவென்றால், பணியாட்கள் அத்தனை பேரும் ஏசி ஹாலில் அன்றிரவு தூங்க, விருந்தினர்கள் நாங்கள் எல்லாம் மொட்டை மாடியில்! கொசுக்கடியில், குளிரில் ஒருவரும் தூங்கவில்லை. பல லட்சம் செலவழித்தவர்களுக்கு, விருந்தினர்கள் வசதியாகத் தங்குவதற்கு, சில ஆயிரங்கள் செலவழிக்க ஏன் முடியவில்லை? வேண்டாம் என்ற எண்ணம் இல்லை. காரணம், அஜாக்கிரதை, சரியான திட்டமிடல் இன்மை, அதைவிட முக்கியமாக நான் சொல்வது... திருமண நிகழ்வைப் பெரிதாக நினைத்தார்களே அன்றி விருந்தினர்களை அல்ல என்பதுதான்.

இவை மட்டுமல்ல. பொதுவாக நம் மகிழ்ச்சிக்காக நாம் செய்யும் நிகழ்வுகள், மற்றவர்களுக்கு மிகப்பெரிய இம்சையாக விளங்குவதும் எனக்கு வருத்தமளிக்கிறது. திருமண ஊர்வலங்கள், இறந்தவர்களின் சடல ஊர்வலங்கள், அரசியல் ஊர்வலங்கள், ஆன்மீக ஊர்வலங்கள் என்று எல்லாமே போக்குவரத்து நெரிசலையும், பொதுமக்களுக்கு அவஸ்தையையும் அளவின்றித் தருகிறது. காரணம் நம் தவறான எண்ணம். முன்பெல்லாம், ஏதோ சில வி.ஐ.பி-க்கள் மட்டுமே இது போன்ற பெரிய ஊர்வலங்கள் நடத்திப் பொதுமக்களுக்குத் தொல்லை தந்தது போக, தற்போது யாரெல்லாம் போக்குவரத்துக்கு இடையூறு செய்து, பொதுமக்களைத் துன்புறுத்துகிறார்களோ அவர்களெல்லாம் வி.ஐ.பி-க்கள் என்ற மோசமான எண்ணத்தை நாம் வளர்த்துக் கொண்டதுதான்.

இதற்கெல்லாம் ஒரு முடிவு வர வேண்டுமானால், நம்மிடையே ஒரு விழிப்புணர்வு வர வேண்டும். நான் முன்பே சொன்னது போல, மனிதனுக்குரிய பண்புகளையும், பண்பாட்டையும் வளர்ப்பதும், எல்லாரும் மகிழ்வாக இருப்பதும் மட்டுமே நம் விழாக்களின் நோக்கமாக இருக்க வேண்டும்! அப்போதுதான், சடங்குகள், சங்கடங்கள் தருவதாக இல்லாமல், சந்தோஷங்களின் மடங்குகளாய் இருக்கும்!