அறிமுகம்:
“ஒளி படைத்த கண்ணினாய், உறுதி கொண்ட நெஞ்சினாய், தெளிவு பெற்ற மதியினாய், வெற்றி கொண்ட கையினாய்” என்றெல்லாம் மகாகவி பாரதியாரால் மட்டுமல்லாது, விவேகானந்தர் முதல் அப்துல் கலாம் வரை அனைத்துத் தலைவர்களாலும் போற்றப் பெறும், ஆற்றல் மிகுந்த இளைஞர்களை, நல்ல வழியில் செலுத்தி, “நல்ல எதிர்காலத்தை இளைஞர்களுக்கும், நல்ல தலைவர்களை எதிர்கால உலகிற்கும்” தருவதையே, தனது முக்கியப் பணியாகக் கொண்ட ஓர் உலகளாவிய பேரியக்கம்தான், ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் (JCI) ஆகும். இளம் தலைவர்கள் மற்றும் தொழில் முனைவோரின் உலகளாவிய அமைப்பாக விளங்கும் இந்த ஜேஸி இயக்கம், 18 முதல் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களை மட்டுமே பிரதான உறுப்பினர்களாகக் கொண்டு வெற்றி நடைபோட்டு வருகிறது.
தோற்றமும், வளர்ச்சியும்:
ஜேஸி இயக்கம், ஹென்றி கிசன்பியர் (Henry Giessenbier) என்பவரால், 1915-ஆம் ஆண்டு, அக்டோபர் 13-ஆம் நாள், அமெரிக்காவில் துவங்கப்பட்டது. முதலில் YMPCA (Young Men Progressive Civic Association) என்ற பெயருடன் துவங்கப்பட்ட இவ்வியக்கம், 1916-ல், ஜூனியர் சேம்பர் சிட்டிசன்ஸ் (Junior Chamber Citizens), சுருக்கமாக ஜேஸி என்று பெயர் மாற்றப்பட்டது. அதன் பிறகு, முழுப்பெயர் பலமுறை மாற்றப்பட்டாலும், ஜேஸி என்கிற சுருக்கப்பெயர் மாறவில்லை. மாற்ற முடியாத அளவிற்கு அது பிரபலமாகிவிட்டது. 1988 முதல் ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் என்று அழைக்கப்பட்டு வரும் இவ்வமைப்பு, உலகெங்கும் சுமார் 125 நாடுகளில், சுமார் 10,000 கிளை இயக்கங்களில், சுமார் 5 லட்சம் உறுப்பினர்களுடன் சிறப்பாக இயங்கி வருகிறது.
நோக்கம்:
என்றும் நிலைத்திருக்கும் உலக சமாதானம் வேண்டும் என்ற கனவுடன், ஜேஸி இயக்கத்தைத் தொடங்கினார் ஹென்றி கிசன்பியர். எனவே, இவ்வியக்கம், இளைஞர்கள் தங்கள் தலைமைப் பண்புகள், சமூகப் பொறுப்புணர்வு, தொழில் முனைவு மற்றும் நட்புறவு போன்றவற்றில் தங்களை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பளிப்பதன் மூலம், ஒரு நல்ல மாற்றத்தை உண்டாக்கி, உலக சமுதாய முன்னேற்றத்திற்கு உதவுவதையே நோக்கமாகக் (Mission) கொண்டுள்ளது. மேலும், இவ்வியக்கத்தின் கோட்பாடு கடவுள் நம்பிக்கை, மனித சகோதரத்துவம், பொருளாதார நீதி, சட்டங்களாலான அரசு, மனித ஆளுமை வளர்ச்சி மற்றும் மனித சேவை போன்ற முக்கிய அம்சங்களைக் கொண்டு விளங்குகிறது.
சிறப்பம்சங்கள்:
ஜேஸி இயக்கம், அதன் உறுப்பினர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்குகிறது. குறிப்பாக, தனிமனித முன்னேற்றம், நிர்வாகத் திறமை, சமூக சேவை, தொழில் வளர்ச்சி மற்றும் சர்வதேச நல்லுறவு ஆகிய ஐந்து பகுதிகளில் அதிக வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக, தனிமனித முன்னேற்றத்திற்கு உதவும் வகையில், தலைமைப் பண்புகள், சிறந்த தகவல் பரிமாற்றம், இலக்கு நிர்ணயம், நேர நிர்வாகம், மகிழ்ச்சியான வாழ்க்கை, மேம்பட்ட மனித உறவுகள் போன்றவற்றில் தேர்ச்சி பெறப், பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தற்போது ளுழகவ ளுமடைடள என்று அழைக்கப்படும் இது போன்ற சிறப்புத் திறன்களில், பல்வேறு படிநிலைகளில், முறையான பயிற்சியளித்து, மண்டல, தேசிய மற்றும் சர்வதேச அளவில் சான்றிதழ்களை வழங்கும் ஒரே உலகளாவிய சமூக இயக்கம் ஜேஸி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜேஸி இயக்கம் பின்பற்றும் கூட்டம் நடத்தும் நெறிமுறைகள், உலகெங்கும் பல நாடுகளின் பாராளுமன்றங்களின் செயல்பாட்டிற்கும், பல சர்வதேச இயக்கங்களின் செயல்பாட்டிற்கும் உதவிகரமாக அமைந்துள்ளன என்றால் அது மிகையல்ல.
புகழ்மிக்கவர்கள்:
ஜேஸி இயக்கம் சாதாரண மனிதர்கள் பலரையும் திறன் படைத்தவர்களாகவும், புகழ்மிக்கவர்களாகவும் மாற்றுகிறது. மேலும் புகழ்பெற்ற பலரும் ஜேஸியின் உறுப்பினர்களாகவும், தலைவர்களாகவும், ஜேஸி இயக்கத்துடன் தொடர்புடையவர்களாகவும் விளங்குகின்றனர். முன்னாள் அமெரிக்க அதிபர்கள் லிண்டன் ஜான்சன், ரிச்சர்டு நிக்ஸன், ஜெரால்டு போர்டு, ஜான் கென்னடி, பில் கிளின்டன், ஆப்பிரிக்க யூனியனின் நிறுவனர் லாரென்ட் டானா பொலாகா, பிரான்ஸின் முன்னாள் அதிபர் ஜாக்கஸ் சிராக், டென்மார்க் நாட்டின் முன்னாள் பிரதமர் பால் ஷ்லடர், ஜப்பான் முன்னாள் பிரதமர் யஸ_ஹிரோ நகசோனே, ஜப்பானின் முன்னாள் பிரதமர் தாரோ அசோ போன்ற பல உலகத்தலைவர்களும், முன்னாள் மத்திய அமைச்சர் மாதவராவ் சிந்தியா, ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், கோவாவின் முன்னாள் முதல்வர் ரவி நாயக் போன்ற பல இந்தியத் தலைவர்களும், ஹீரோ ஹோண்டா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முன்ஜால், கோத்ரெஜ் நிறுவனத்தின் தலைவர் ஆதி கோத்ரெஜ், இதயம் நிறுவனங்களின் அதிபர் முத்து, சக்தி மசாலா நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் சாந்தி துரைசாமி போன்ற தொழிலதிபர்களும், ஜேஸி இயக்கத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நிர்வாகம்:
சர்வதேச அளவில், ஒரு தலைவரும், அவருடைய ஆட்சிமன்றக் குழுவும் ஜேஸி இயக்கத்தை நிர்வகிக்கின்றனர். (2011-ன் சர்வதேசத் தலைவர் -- ஜப்பானைச் சேர்ந்த ஹண்டாரோ கருடா). இந்தியாவில், 1949-ல், கல்கத்தாவில் தொடங்கப்பட்ட ஜேஸி இயக்கம், நாடெங்கும் பரவியுள்ளது. இந்திய அளவிலும், அதேபோல் ஒரு தலைவர் மற்றும் ஆட்சி மன்றக் குழுவினர் இருப்பர். (2011-ன் இந்திய தேசத் தலைவர் -- நம் தமிழ்நாட்டின், ஈரோட்டைச் சேர்ந்த பாலவேலாயுதம்). ஜேஸிஐ இந்தியா, நிர்வாக வசதிக்காக, மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மண்டல அளவிலும் ஒரு தலைவரும், ஆட்சி மன்றக் குழுவினரும் இருப்பர். ஒவ்வொரு மண்டலத்திலும் ஏராளமான ஜேஸி சங்கங்கள் இருக்கும். இவை கிளை இயக்கங்கள் (LOM) என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு சங்கத்திலும், ஒரு தலைவர் மற்றும் ஆட்சி மன்றக் குழுவினர், சங்க செயல்பாடுகளைக் கவனிப்பர். ஒரே ஊரில் அல்லது பகுதியில், பல ஜேஸி சங்கங்கள் இருக்கலாம்.
மண்டலம் - மாநாடு:
இந்தியாவில் உள்ள 23 ஜேஸி மண்டலங்களில், கன்னியாகுமரி முதல் புதுக்கோட்டை வரை உள்ள சுமார் 10 மாவட்டங்கள், மண்டலம் 18-ல் (Zone - XVIII) அடங்கும். இதனுடைய 2011-ன் மண்டலத் தலைவராக எங்கள் புதுக்கோட்டையைச் சேர்ந்த நல்லதம்பி உள்ளார். இந்த மண்டலத்தில், தற்போது சுமார் 60 கிளை இயக்கங்களும், 2000-த்திற்கும் அதிகமான உறுப்பினர்களும் உள்ளனர். மண்டலத்தில் உள்ள அனைத்து ஜேஸிக்களும் சங்கமிக்கும் திருவிழாவாக, ஆண்டுதோறும் மண்டல மாநாடு ஒன்று நடத்தப்பெறும். இந்த ஆண்டு மண்டல மாநாட்டை, ஏற்கனவே நான்கு முறை சிறப்பாக மண்டல மாநாடுகளை நடத்தியுள்ள, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் மிக்க புதுக்கோட்டை சென்ட்ரல் ஜேஸி இயக்கம், பொறுப்பேற்று நடத்த உள்ளது. சிறப்பு விருந்தினர்களின் உரைகள், அடுத்த ஆண்டின் மண்டலத் தலைவருக்கான தேர்தல், வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள், விருதுகள் வழங்கும் விழா, அறுசுவை உணவு, கனிவான உபசரிப்பு என்று களைகட்ட இருக்கும், இந்த ஆண்டின் மண்டல மாநாடு குறித்த விபரங்கள் கீழ் வருமாறு:
நாள்: அக்டோபர் 8 மற்றும் 9 ஆகிய இரு நாட்கள் (8,9-10-11)
இடம்: கிரீன்பேலஸ் A/c Hall, புதிய பேருந்து நிலையம் எதிரில், புதுக்கோட்டை.
மாநாட்டிற்குப் பதிவு செய்ய மற்றும் மாநாடு தொடர்பான அனைத்து விவரங்களுக்கும், தொடர்பு கொள்க: Jc. R.M. லெட்சுமணன், மாநாட்டு இயக்குநர் - 98429 12223