“சார், நான் ஒயின் சாப்பிடவா..?” தொலைபேசியில், என்னிடம் அனுமதி கேட்ட, ஒரு +2 மாணவனை, நான் அதிர்ச்சியுடன் பார்த்தேன். எனது பயிலரங்கில் ஏற்கனவே பங்கு பெற்றிருந்தான் அவன். தமிழகத்தின் ஒரு மாநகரத்தில், அவன் படித்து வரும் தனியார் பள்ளியில், ஃபேர்வெல் பார்ட்டியை, ஒரு நட்சத்திர ஓட்டலில், மாணவர்கள், தாங்களே செலவு செய்து, ஏற்பாடு செய்திருந்தார்கள். (என்ன ஒரு வளர்;ச்சி..!!!!!!!!!!!!!!!!!!!!!!) அதில் சில மாணவர்கள் ஒயின் அருந்துவார்களாம். நான் மட்டும் அப்போது பார்த்துக்கொண்டு இருக்க முடியுமா? என்பதுதான் அவனது கேள்வி. நியாயம்தானே! நண்பர்களோடு இருக்கும்போது, அதுவும் ஸ்டார் ஹோட்டலில், அவர்களுக்கு சமமாக இருக்க வேண்டாமா? ரோம் நாட்டில் இருக்கும்போது, ரோமானியனாக இரு என்று நாம்தானே, அவர்களுக்குப் பாடம் சொல்லியிருக்கிறோம்.
நான் வழக்கம்போல், அதன் தீமைகளை எடுத்துரைத்து, ஒயின் அருந்த வேண்டாம் என்று அறிவுறுத்தினேன். உடனே, அவன் கேட்டான் “நான் எந்தப் பிரச்சனையை அல்லது சந்தேகத்தை உங்களிடம் கேட்டாலும், எனக்கு விளக்கமளித்துப் பின் முடிவை என்னையேதானே எடுக்கச் சொல்வீர்கள்! இந்தக் கேள்விக்கு மட்டும் நீங்களே ஏன் முடிவை சொல்லி விட்டீர்கள்?” என்று. நான் உண்மையிலேயே அசந்து போனேன். என் மாணவனின் அறிவுத்திறத்தைப் பார்த்து மட்டுமல்ல, அவன் என்னை எவ்வளவு புரிந்து வைத்துள்ளான் என்றும்தான். அவனுக்கு நான் சொன்ன பதிலுரையின் சாரம்தான், இக்கட்டுரையின் சாரமும்.
புத்தாண்டு முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆனாலும், இன்னும் அந்தச் செய்திகள் என் மனதிலிருந்து மறையவில்லை. புத்தாண்டு தினத்தன்று மட்டும், எத்தனை விபத்துகள், எத்தனை வன்முறைகள், எத்தனை உயிரிழப்புகள், எத்தனை பிரச்சனைகள்...! புதிய நம்பிக்கையோடும், புத்துணர்ச்சியோடும் பிறக்க வேண்டிய புத்தாண்டு ஏன் இப்படி ஆனது? – யோசி!
நம்மில் பெரும்பாலானோர், புத்தாண்டை ஏதேனும் ஒரு வகையில் கொண்டாடத்தான் செய்கிறோம். ஆனால், சிலர் இந்த ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை எதிர்க்கின்றனர். அவர்கள் சொல்வதிலும் நியாயம் இருப்பதை, மேற்சொன்ன நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன. ஆனால், இந்தப் பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணம், புத்தாண்டா அல்லது நாம் அதைக் கொண்டாடும் விதமா..? – யோசி!
சிக்கல், புத்தாண்டு தினத்தில் இல்லை. அதை ஒட்டி விற்பனையாகும் மதுவின் அளவில்தான் இருக்கிறது. நான் மேற்சொன்ன சோக நிகழ்வுகளில், பெரும்பாலானவை மதுவினால் விளைந்த கேடுகள். ஆங்கிலப் புத்தாண்டினைக் கொண்டாடுவதால் எந்தக் கேடும் இல்லை. ஆனால், அதையொட்டி அதிகமாக விற்பனையாகும் மதுவினால் விளையும் கேடுகள் ஏராளம் அல்லவா? புத்தாண்டுக் கொண்டாட்டங்களைத் தடை செய்தால் மட்டும், இந்தக் கேடுகள் குறையாது. ஏனென்றால் யதார்த்தத்தில், எந்த ஒரு மகிழ்வான நிகழ்வு என்றாலும், கொண்டாட்டம் என்றாலும், உடனே நம்மவர்கள் கேட்பது “சரி, எப்ப பார்ட்டி..?”. நம்மைப் பொறுத்தவரை, கொண்டாட்டம் என்றாலே, அதில் நிச்சயம் மது இருக்க வேண்டும் என்ற மோசமான வழக்கத்திற்கு, நாம் மாறிக் கொண்டிருக்கிறோம்.
திருமணமா...? மாப்பிள்ளையின் நண்பர்களுக்கு அன்று இரவு நிச்சயம் தண்ணி பார்ட்டி இருக்க வேண்டும். சில நேரங்களில் மாப்பிள்ளையையும் வற்புறுத்தி இணைத்து விடுவார்கள். பிறகு பூ வாசம் வீச வேண்டிய முதலிரவில், பீர் வாசம் வீசும். வாழ்க்கையே நாறிவிடும். பல இடங்களில், மாப்பிள்ளையின் நண்பர்கள்தான் என்றில்லை, இரு வீட்டாரிடமும், பல உறவினர்கள், நண்பர்கள் பார்ட்டி கேட்பது, தற்போது வாடிக்கையாகிவிட்டது.
புத்தாண்டா..? அதைக் கொண்டாட, புத்தாண்டு முன்தினத்தில், இரவு 12 மணிக்கு, போதையில், நடுரோட்டில் வைத்துக் கேக் வெட்ட வேண்டும். போகும் பாதையெல்லாம் “ஹேப்பி நியூ இயர்” என்று நடுராத்திரியில் அலற வேண்டும். கொஞ்சம் பணமிருந்தால், பப், டிஸ்கொதே, ஸ்டார் ஹோட்டல் பார்ட்டிகள் என்று, ஒழுக்கக் கேடுகளைக் கொஞ்சம் காஸ்ட்லியாகச் செய்வார்கள். தெருவென்றாலும், ஹோட்டல் என்றாலும், போதையில் ஓடுவது, பாடுவது, ஆடுவது, போவோர் வருவோரையெல்லாம் சாடுவது, வம்புகளை வளர்ப்பது, ஒழுக்கமின்றி நடந்துகொள்வது என்று, இவர்களுக்கெல்லாம் புத்தாண்டு எப்போதுமே சாத்தானின் ஆண்டாகத்தான் விடிகிறது.
பொது அமைப்புகளில் இருப்பவர்களைக் கேளுங்கள். பெரும்பாலான சங்கங்கள் வைன் அண்ட் டைன் சங்கங்களாகவே உள்ளன. மாதக் கூட்டம் என்றால் “லிமிடெட்”. முக்கிய நிகழ்வுகள் அல்லது மாநாடுகள் என்றாலோ “அன்லிமிடெட்”. இதில் கொடுமை என்னவென்றால், குடிக்கும் கேவலத்தைக், கொஞ்சம் கூட வெட்கமின்றி, விளம்பரம் வேறு செய்வார்கள். ஏனென்றால், குடிதான் நட்பினை வளர்க்குமாம். அப்படிக் குடியினால் வரும் நட்பினை விட, தெளிந்த செயலால் வரும் எதிரியே மேல் என்பது என் கருத்து.
இந்தக் குடிப்பழக்கத்தால் விளையும் தீமைகள் ஒன்றல்ல, இரண்டல்ல. உடல் நலத்தை விடுங்கள். அவரவர் உடல். அவர்களே பார்த்துக்கொள்வார்கள். ஆனால், சமூக அளவில் எத்தனை தீமைகள்? என் கவiயெல்லாம் அவை குறித்துத்தான்.
• குடிபோதையால் விளையும் சாலைவிபத்துகள். அதிலும், குடிக்காத, தவறு செய்யாத பல அப்பாவிகள் அதில் பாதிப்படைவது.
• குடிபோதையால் விளையும் பிரச்சனைகள். (எ.கா.) புத்தாண்டு தினத்தில், எங்கள் ஊரில், மூன்று இளைஞர்கள் குடிபோதையில், தெருவிளக்கை உடைக்க, அதை சிலர் தட்டிக் கேட்க, தட்டிக்கேட்டவர்களை இளைஞர்கள் மிகக் கடுமையாகத்தாக்கி, அவர்கள் எல்லாரும் இப்போது மருத்துவமனையில். மூன்று இளைஞர்களும் சிறைச்சாலையில்.
• குடிபோதையால் விளையும் சமூகச் சீரழிவுகள், பாலியல் கொடுமைகள். (எ.கா.) சில ஆண்டுகளுக்கு முன், குடிபோதையில் ரோட்டில் சென்று கொண்டிருந்த இளைஞர்கள், இருட்டில் ஒரு பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ததில், அப்பெண் அங்கேயே மரணமடைந்துவிட்டாள். அப்பெண்ணின் வயது சுமார் 70. போதையில் குமரிக்கும், கிழவிக்கும் எப்படி வித்தியாசம் தெரியும்?
மேற்சொன்னவை எல்லாம் கூட வெறும் உதாரணங்கள்தான். ஆனால், உண்மை.......... இவற்றையெல்லாம் விட அதிகமானது, பயங்கரமானது, நம்பமுடியாதது, நம்மை அதிகமாகக் கோபமும், வருத்தமும் அடையச் செய்வது.
மதுவினால் அறிவையும், உணர்வையும் இழக்கிறோம் என்பதை நான் மேற்சொன்ன செய்திகள் அனைத்தும் உணர்த்துகிறது. அறிவும், உணர்வும் இல்லையென்றால் நாம் மனிதர்களே இல்லை என்பதை நாம் இன்னும் உணரவில்லை.
இன்னும் கூட, “சாராயம்தான் கெடுதல். விலை அதிகமான மதுவகைகள் ஒன்றும் செய்யாது. ஹாட் வகைகள்தான் கெடுதல். பீர் குடித்தால் உடலில் தெம்பு கூடும். சதை போடும். ஒயின் குடிப்பது, உடலுக்குப் பளபளப்புத் தரும். அளவோடு இருந்தால், எதுவுமே தப்பில்லை. ஏதோ ஒருநாள் குடித்தால், நான் கெட்டவனா?” என்றெல்லாம், பலவாறும் நாம் சப்பைக் கட்டுகள் கட்டுவதிலும், சாக்குகள் சொல்வதிலுமே காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம். இப்படி எல்லாம் வாதம் செய்தாவது, அந்த மதுவைப் பழகியே ஆக வேண்டுமா..? மது என்ன, வாகனம் ஓட்டுவது போலவோ, செல்போன் பேசுவது போலவோ, இன்டர்நெட்டில் பணிபுரிவது போலவோ, செல்ப் ஷேவிங் போலவோ, நாகரிக காலத்தின் கட்டாயமா, நாம் பழகிக் கொள்வதற்கு..? – யோசி!
ஏழை, பணக்காரர் என்று எந்த ஒரு வித்தியாசமும் இன்றிப், பல்கிப் பரவிவிட்ட இந்தக் குடியை என்ன செய்வது? இத்தனைக்கும், இப்போது யாரும் குடியினால் வரும் தீமைகளை அறியாமல் குடிப்பது இல்லை. தெரிந்தே செய்கிறார்கள். என்ன செய்வது?
எது நாகரிகம்? எது பண்பாடு? ஒழுக்கத்தை விலையாகத் தந்துதான் என்னை நாகரிகமானவன் என்று நிரூபிக்க வேண்டுமா? மைனஸ் டிகிரிகளில் குளிர் வாட்டும் பகுதிகளில் உள்ளவர்களின் பழக்கத்தை, உச்சியைக் காய வைக்கும் வெயில் பகுதியில் நாமும் செய்ய வேண்டுமா? (ஓ! அதற்காகத்தான் சிலர், ஏசி அறைகளில் தண்ணி அடிக்கிறார்களோ!) மகிழ்ச்சிக்காக, எதை வேண்டுமானால் செய்யலாமா? கொடைக்கானல், ஊட்டி போன்ற பகுதிகளுக்கு டூர் செல்வதே, போதையில் விழுந்து கிடக்கத்தானா? மகான் அரவிந்தரும், மகாகவி பாரதியும் வாழ்ந்த பாண்டிச்சேரியை, பார்-சேரி-யாக என்ற எண்ணத்தை உண்டாக்கியது நியாயந்தானா? – யோசி!
இவையெல்லாம் கால மாற்றத்தின் கரைகளா? இல்லை, காலத்தின் மீது படிந்த கறைகளா? ஒழுக்கம் என்பது தனி மனிதன் சார்ந்தா? சமுதாயம் சார்ந்ததா? ஒழுக்க விதிகளில் அவசியம் மாறுதல் வேண்டுமா? – யோசி! அடுத்த கட்டுரையில் தேடலைத் தொடர்வோம்!
வெள்ளி, 7 ஜனவரி, 2011
போதை தெளிவோம்!
லேபிள்கள்:
புத்தாண்டு,
போதை,
மது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)