சென்ற வாரம், செப்டம்பர் 5-ஆம் நாள், நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள் - ஆசிரியர் தினம். ஆசிரியராக இருந்து, பின்னர் இந்நாட்டின் குடியரசுத் தலைவராக மலர்ந்த அவரது பிறந்த நாளைக் கொண்டாட, ஆசிரியர் தினம் என்பது மிகப் பொருத்தமானதே!
ஆனால், நம் நாட்டில் ஆசிரியர் தினம் கொண்டாடுவது இருக்கட்டும். ஆசிரியர்களைக் கொண்டாடுகிறோமா? – யோசி!
ஆசிரியர்களைப் போற்றுவதற்காக, டாக்டர். ராதாகிருஷ்ணன் அவர்கள் பெயரில், நமது தமிழக அரசு வழங்கும் விருதுகளில்தான் எத்தனை குளறுபடிகள்! பள்ளிக்கே ஒழுங்காக செல்லாதோருக்கும், ஒழுக்கமில்லாதவர்களுக்கும், பணம் கொடுப்பவர்களுக்கும், பரிந்துரை பிடிப்பவர்களுக்கும் என்று சில தகுதியில்லாவர்களுக்கும் அந்த விருதுகள் கொடுக்கப்படுவதனால், தகுதியிருந்து பெறுபவர்களுக்குக் கூட தர்மசங்கடமாகிவிடுகிறது!
அதனால்தான், அரசு விருது பெறாத சிறந்த ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருதுகள் வழங்குவது என்று எங்கள் கவிராசன் அறக்கட்டளையில் தீர்மானித்தோம். பாரதியாரின் பெயரான கவிராசன் என்பதில், எங்கள் குடும்பத்தினரின் முதலெழுத்துகளும் உள்ளன. எனது தாயாரை நடத்துநராகவும், எனது அண்ணனை நிர்வாக அறங்காவலராகவும், எனது தந்தையாரை ஆலோசகராகவும் கொண்டு, நான், 2006-ல் தொடங்கியதே இந்தக் கவிராசன் அறக்கட்டளை.
இதுவரை, பல ஆயிரக்கணக்கான ரூபாய்கள் நற்பணிக்காக செலவழித்திருந்தாலும், ஒரு ரூபாய் கூட நன்கொடை பெற்றதில்லை என்பதே எங்கள் அறக்கட்டளையின் சிறப்பு. கடந்த 5 ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 5-ஆம் தேதியில், நாங்களே நேரடியாகத் தேர்வு செய்து, “நல்லாசிரியர்” விருதுகள் வழங்கி வருகிறோம். இதுவரை 31 ஆசிரியர்கள் இவ்விருதுகளைப் பெற்றுள்ளனர்.
கடந்த செப்டம்பர் 5 ஞாயிற்றுக்கிழமை மாலை, இந்த ஆண்டிற்கான விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், உயர்திரு. முத்துச்சாமி அவர்கள், தான் இந்த நிலைக்கு உயரக் காரணமான உன்னதமான ஆசிரியர் திரு. கிருஷ்ணசாமி அவர்களை உருக்கமாக நினைவு கூர்ந்தார். மேலும், அவரது உரையில் அவர் சொன்ன வாக்கியம்தான், இந்தக் கட்டுரையின் தலைப்பாக உருப்பெற்றுள்ளது. அவர் சொன்னார் “ஒரு நல்ல ஆசிரியர் வறுமையில் வாடினால், அது நம் நாட்டுக்கே அவமானம்” என்று.
நல்ல ஆசிரியர்களுக்கு வறுமை என்பது பொருளாதாரத்தில் இருப்பதே, இந்த நாட்டிற்கு அவமானம் என்றால், நல்ல ஆசிரியர்களின் எண்ணிக்கையிலும் வறுமை ஏற்படின், அது எவ்வளவு பெரிய அவமானம்? – யோசி!
ஆசிரியர்களைப் பற்றி, சமீபத்தில் நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் வரும் செய்திகள் மெச்சும்படியாக இல்லை. இதற்கு ஆசிரியர்கள் மட்டும் காரணமில்லை. தகுதியில்லாதோரை, லஞ்சம், ஊழல், பரிந்துரைகள் காரணமாக நியமிக்கும் அரசாங்கமும், பள்ளி – கல்லூரி நிர்வாகங்களுமே முதல் குற்றவாளிகள். தனியார் நிறுவனங்களில் குறைவான சம்பளம், அரசு நிறுவனங்களில் மோசமான நிர்வாகம் என்று ஏராளமான குற்றவாளிகள் இதற்குப் பொறுப்பாளிகள் ஆவார்கள்.
காரணங்களை அடுக்குவதால், சில ஆசிரியர்களின் தவறான போக்கினை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த மாட்டேன். காரணம், ஆசிரியப் பணி என்பது தொழில் அல்ல. லாப, நட்டக் கணக்குப் பார்ப்பதற்கு. அது ஒரு சமூக சேவை. நாளைய சமூகம் நலம்பெற, ஒரு தலைமுறையின் நடத்தையையே மாற்றக்கூடிய சக்தி வாய்ந்த சேவை. அந்தப் பொறுப்பினை உணர்ந்து ஆசிரியர்கள் நடக்க வேண்டும்.
அல்லவை அழிய வேண்டுமானால் நல்லதைப் போற்றுங்கள். உண்மையிலேயே தொண்டுணர்வோடு, முன்னுதாரணமாகப் பணியாற்றுகின்ற நல்ல ஆசிரியர்களை, ஊரறிய, உலகறியப் பாராட்ட வேண்டும். அவர்களுக்குரிய அங்கீகாரங்களை வழங்க வேண்டும். அப்போது, தானாகவே, சில களைகள் தலைகுனியும். மீறி, நிமிர்பவை களையப்படும்.
ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகள், கல்வியியல் கல்லூரிகள் போன்றவற்றில், மதிப்புக் கல்வியை வலியுறுத்துவோம். ஒழுக்கமுடையவர்கள் மட்டுமே சேர்கிற பணியாக ஆசிரியப் பணியை மாற்றுவோம்.
நல்ல ஆசிரியர்களால் மட்டுமே நல்ல சமூகத்தை உருவாக்க முடியும்! நல்ல சமூகம் என்பது நல்ல ஆசிரியர்களை மதித்துப் போற்றுவதாக இருக்க வேண்டும்!
வெள்ளி, 10 செப்டம்பர், 2010
நல்ல ஆசிரியர்களுக்கு வறுமை கூடாது!
லேபிள்கள்:
ஆசிரியர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)