ஞாயிறு, 27 ஜூன், 2010
ஒரு ஆள் உலகம்
தலைப்பைப் பார்த்தவுடன், ஏதோ தனிமையிலே இனிமை காண்பதைப் பற்றிச் சொல்லப்போகிறேன் என்று முடிவு செய்து விடாதீர்கள். இந்தக் கட்டுரை நம் ஒவ்வொருவரையும், தனி ஆளாக, இந்த உலகத்தின் பிரதிநிதியாக சிந்திக்கப் போகிறது. ஆமாம். அதனால்தானே, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழியே வந்தது.
சமீபத்தில் ஆனந்த விகடனில், “ஹாய் மதன்” பகுதியில், ஒரு கேள்வி வெளியாகி இருந்தது. “நான் ஒருவன் மட்டும் ஓட்டுப் போடாவிட்டால் என்ன?” என்பதுதான் அந்தக் கேள்வி. அதற்கு மதன் கூறியிருந்த பதிலை விட, அந்தக் கேள்வி என் அடிமனதில் ஆயிரம் சிந்தனைகளைத் தோற்றுவித்தது. அதுவும், பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில், சென்னையிலிருந்து, திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த போது இக்கேள்வியை நான் படிக்க நேர்ந்தது. ரயிலின் சப்தம், வளைவுகள், பக்கத்திலிருந்த சக பயணிகளின் உரையாடல்கள், சங்கடங்கள் என எதுவும், இக்கேள்வியில் இருந்து என்னை திசை திருப்பிவிட முடியவில்லை. கையில் புத்தகத்தை வைத்துக்கொண்டு, ஜன்னலின் வழியே, இயற்கையின் மீது பார்வையைப் படரவிட்டவனாய் இருந்த என்னுள், இயற்கையாகவே, இந்த மனிதர்களின் இயற்கை குறித்த எண்ணங்கள் மேலோங்கியது.
“நான் ஒருவன் மட்டும் ஓட்டுப் போடாவிட்டால் என்ன?” ஓட்டுப் போடுதல், ஜனநாயகக் கடமை என்பது சரிதான். ஆனால், ஓட்டுப்போடுவது மட்டும் குறித்தல்ல எனது சிந்தனை. எந்த ஒரு செயலானாலும், அதே கேள்வியைக் கேட்டுக்கொள்ளலாம். “நான் ஒருவன் மட்டும் இதைச் செய்தால் என்ன? அல்லது செய்யாமல் இருந்தால் என்ன?” உண்மைதானே. யாரோ ஒரே ஒருவர் ஒரு செயலைச் செய்தாலோ, அல்லது செய்யாமல் விட்டுவிட்டாலோ, இந்த உலகில் என்ன மாற்றம் நிகழ்ந்து விடும்? பூனை கண்ணை மூடிக் கொண்டுவிட்டால், உலகம் இருண்டா போய்விடும்? – யோசி...!
நாம் எல்லோருமே, அடிப்படையில் பல செய்திகளைப், பொதுவாழ்வில் ஒருவிதமாகவும், தனி வாழ்வில் வேறு விதமாகவுமே பேசியும், செய்தும் வருகிறோம். இதற்கு ஒரு உதாரணமாக, எனது முந்தைய கட்டுரை “விந்தை மனிதர்கள்-1”-ல் கூட பல உதாரணங்களைக் கூறி இருந்தேன். “நான் ஒருவன் குப்பை போட்டால் என்ன?”, “நான் ஒருவன் சிக்னலை மதிக்காவிட்டால் என்ன?”, இது போன்ற ஆயிரம் கேள்விகள், தனி வாழ்வில் தனி மனிதர்கள், தங்கள் செயல்களுக்கு நியாயம் கற்பிப்பதற்காகக் கூறுவது. ஆனால், அவர்களே, மற்றவர்களுக்கென்று வரும்போதும், பொது வாழ்விலும் இவற்றையெல்லாம் தவறு என்கிறார்கள். சரி. ஏன் தவறு என்று பார்த்துவிடுவோம்.
முதலில், இந்த விளக்கங்கள் எல்லாம் நம்மை சில மோசமான பழக்கங்களுக்கு அடிமையாக்கிவிடும். அதாவது தவறுகளுக்கு நியாயம் கற்பிக்கப்போய், தவறுகளே வழக்கமாகப் பழக்கமாக மாறிவிடும் அபாயம் உள்ளது. உதாரணமாக, ஒரு குழந்தை “இன்று ஒருநாள் மட்டும் லேட்டா எழுந்திரிச்சா என்ன” என்றோ, “இன்று ஒருநாள் மட்டும் ஸ்கூலுக்குப் போகலைன்னா என்ன?” என்றோ, கேட்கத் தொடங்கினால், அவையே பழக்கமாகி, பிறகு, லேட்டாக எழுவதும், ஸ்கூலுக்குப் போக அடம்பிடிப்பதும் வாடிக்கையாகத் தொடர்ந்துவிடும் என்பதுதான் அவற்றில் உள்ள அபாயம். தவறு என்பது தவறிச் செய்வது என்ற நிலை மாறி, தவறு செய்வதையே வாழ்க்கையாக்கி விடுகிறோம். எனவே, தவறுகளைத் திருத்துவதை விட்டு விட்டு, தயவு செய்து உங்கள் தவறுகளுக்கு நியாயம் கற்பிக்க முயலாதீர்கள். பிறகு, அதுவே உங்கள் வாழ்க்கையை வீணாக்கிவிடும். சிகரெட், மது, மாது, வன்முறை, லஞ்சம், ஊழல் உள்ளிட்ட எல்லா சமூகக் கேடுகளும் இந்த நியாயப்படுத்துவதினால் விளைந்தவைதான் என்பதை மறவாதீர்கள்.
மற்றொரு முக்கியமான சிந்தனை - இந்த உலகத்தின் வரலாறு என்பது, சில தனிப்பட்ட மனிதர்களின் வரலாறு என்பதை மறவாதீர்கள். சில அரசர்கள், சில அறிவியலாளர்கள், சில சிந்தனையாளர்கள், சில சாதனையாளர்கள் என உலக வரலாறே சில மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றியதுதான். நமக்குப் புரிகிற பாணியில் சொன்னால், எத்தனை படம் எடுத்தாலும், அதில் எத்தனை கேரக்டர்கள் வந்தாலும், அது அப்படத்தின் ஹீரோக்களின் வாழ்க்கையைப் பற்றியதுதான். எனவே, ஒவ்வொரு தனி மனிதனும் இந்த சமுதாயத்தின் முக்கியமான, தவிர்க்க முடியாத அங்கம். நான் ஒரு தனிமனிதன் சரியாக இருந்தால், சமுதாய மாற்றத்திற்கான ஒரு விதையை நான் விதைத்திருக்கிறேன் என்று பொருள். அது மரமாக வளர்ந்து கனிகள் கொடுக்கப் பல்லாண்டுகள் ஆகலாம். ஆனால், விதை நல்லதாக இருந்தால், மரமும், அது தரும் கனிகளும் நிச்சயம் நல்லதாகத்தான் இருக்கும். நம்புங்கள்.
நீங்கள் தசாவதாரம் படம் பார்த்திருப்பீர்கள். அதில் “கேயாஸ் தியரி” என ஒன்றை விளக்குவார்கள். அதாவது, இந்த உலகத்தின் எந்த ஒரு செயலும், வேறு ஒரு விளைவுக்குக் காரணமாக அமையலாம் என்பது. உதாரணமாக, நான் ஒருவன் மட்டும் மரத்தை வெட்டினால் என்ன என்று பலரும் செய்ததன் விளைவுதான், இன்று நாம் அனுபவிக்கும் கொடும் வெயில். "Global Warming" . இப்படி நான் ஒருவன் மட்டும் என்று நாம் செய்யும் தவறான செயல்கள் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. நாம் ஏன் நல்ல செயல்களுக்கு, உயர்ந்த நெறிகளின் அடிப்படையில் வாழ்வதற்கு, இந்த “நான் ஒருவன் மட்டும்” வாசக்தை நல்ல வழியில் பயன்படுத்தக் கூடாது? – யோசி.
நம் கடமைகளைச் செய்யாமல் இருப்பதற்கும், தள்ளிப்போடுவதற்கும், சோம்பேறித்தனத்திற்கும், தவறுகளை நியாயப்படுத்துவதற்கும் மட்டும்தான் “நான் ஒருவன் மட்டும்...” என்ற வாசகம் பயன்படும். நான் என்பவன் இந்த உலகத்தின் பிரதிநிதி. நான்தான் உலகம் என உணருங்கள். நான் ஒருவன் தான் உலகம் என்று சுயநலத்தோடு வாழச் சொல்லவில்லை. ஆனால் நான் என்பவன், இந்த உலகத்தின் உதாரணம் என்று எண்ணுங்கள். நல்ல முன்னுதாரணமாக வாழ முயலுங்கள். நான் ஒருவன் மட்டும் என்று ஒவ்வொருவரும் எண்ணுவதால்தான் இங்கு எதுவுமே சரியாக இல்லை. சரிப்படுத்தவும் முடியவில்லை. நான் ஒருவன் மட்டும் சரியாக இருந்து என்ன பயன் என்று ஒவ்வொருவரும் எண்ணத் தொடங்கிவிட்டனர். அதற்கு நானும் ஒரு காரணமாக மாறி விட்டேன். ஒரு மாற்றாக, உலகம் எப்படி இருந்தாலும், நான் சரியாக மட்டுமே இருப்பேன். மற்றவர்கள் எல்லாம் கடமைகளை ஒழுங்காகச் செய்யவில்லை என்றாலும், நான் என் கடமைகளைச் சரியாகச் செய்வேன் என்று உறுதி கொள்ளுங்கள். செயல்படுங்கள். அப்போது இந்த உலகமே சரியான பாதையில் உங்களைப் பின்பற்றும். உலகத்தைப் பின்பற்றியவர்களை இந்த உலகம் ஒரு போதும் மதித்ததும் இல்லை. வரலாற்றில் பதித்ததும் இல்லை. யாரையெல்லாம் இந்த உலகம் பின்பற்றியதோ அவர்களே சரித்திர நாயகர்கள் என்பதை மறவாதீர்கள். இறுதியாக, சீனத் தத்துவ ஞானி கன்பூசியஸின் பொன்மொழி வாக்கியம் - உங்கள் சிந்தனைக்காக.
“எது வசதியானதோ, அதைச் செய்யாதீர்கள். எது சரியானதோ, அதை மட்டுமே செய்யுங்கள்”
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)