வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

சுதந்திரம் உணர்வோம்! உயர்த்துவோம்!


வரும் ஆகஸ்டு 15 அன்று, நமது பாரத மணித்திருநாடு, தனது 64-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடத் தயாராகி வருகிறது. ஆனால், உண்மையிலேயே, சுதந்திரம் என்றால் என்ன, என்று நாம் ஒழுங்காகப் புரிந்திருக்கிறோமா? நமது நாட்டின் சுதந்திர வரலாற்றை நன்றாகத் தெரிந்திருக்கிறோமா? சுதந்திரத்தின் அருமையை, மதிப்பை உணர்ந்திருக்கிறோமா? சற்றே சந்தேகமாகத்தான் இருக்கிறது. – யோசி!

சுதந்திரம் என்பது கட்டுப்பாடுகளே இல்லாத, தறிகெட்ட, நெறிகெட்ட வாழ்க்கை என்றுதான் நம்மில் பலர் கருதிக் கொண்டிருக்கிறோம். “நான் எது செய்தாலும் அது சரியானதுதான்” என்று நம்மில் பலர் வாதிட்டுக் கொண்டிருக்கிறோம். உண்மையிலேயே, அப்படிக் கட்டுப்பாடுகள் இல்லாமல் இருந்தால் உலகம் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்! எந்த முன்னேற்றமும் இல்லாத அடர்காடாக, மனிதர்கள் மிருகங்களாக வாழும் நடுக்காடாக, மனிதம் மரணமடைந்துவிட்ட சுடுகாடாக இருக்கும். என்னைப் பொறுத்தவரை, கட்டுப்பாடுகளே இல்லாமல் வாழ்வது சுதந்திரம் அல்ல. கட்டுப்பாடுகளை மற்றவர் என்மீது திணிக்காமல், நானே விரும்பி, சுய கட்டுப்பாட்டுடன் வாழ்வதே உண்மையான சுதந்திரம் ஆகும். மனம் போன போக்கில் எல்லாம் வாழாமல், நாம் விரும்பும் போக்கில் மனத்தைச் செலுத்துவதே உண்மையான சுதந்திரம் ஆகும்.

“உன் சுதந்திரம் என்பது அடுத்தவரின் மூக்கு நுனி வரை” என்று ஒரு பொன்மொழி சொல்கிறது. அதாவது, அடுத்தவரின் சுதந்திரத்தைக் கெடுக்காமல், எனது சுதந்திரம் இருக்க வேண்டும். ஆனால் இன்று என்ன நிலை? தனிமனித சுதந்திரத்தைப் பற்றி வாய்கிழியப் பேசும் யாரும், சமுதாய ஒழுக்கத்தை மதிப்பதில்லை. தன் சுதந்திரத்தைப் பற்றியே கவலைப்படும் யாரும், மற்றவர்களின் சுதந்திரத்தைப் பற்றி சிந்திப்பதே இல்லை. – யோசி!

சரி, நமது இந்திய நாட்டின் சுதந்திரத்தின் அருமையையாவது உணர்ந்திருக்கிறோமா? அதுவும் இல்லை. இந்த நாட்டை அவமதிப்பதற்கும், தலைவர்களை இழிவு செய்வதற்கும், இந்தியாவைக் கிண்டலடித்து ஜோக்குகள் சொல்வதற்கும், நினைத்ததையெல்லாம் பேசவும், எழுதவும், பரப்புவதற்கும், சமுதாயத்தைப் பாதிக்கும் வகையில் போராடுவதற்கும், சிலரின் சுயநலத்திற்காகப் பலரை அழிக்கும் வன்முறையில் ஈடுபடுவதற்கும், அப்பப்பா... நமக்கெல்லாம் இவற்றுக்குத்தானா சுதந்திரம்..? சுதந்திர தினத்தன்று, அதைக் கொச்சைப்படுத்தும் வகையில் போராட்டங்கள், கருப்புக் கொடிகள். என்ன காரணமாக இருந்தாலும், அந்தப் புனித நாளில் இவற்றைச் செய்யலாமா? இதற்கெல்லாம்தானா நமக்கு சுதந்திரம்? – யோசி!

காந்தி, நேரு, நேதாஜி போன்ற மிகச் சில தலைவர்களைப் பற்றி மட்டுமே நாம் அறிந்திருக்கிறோம். (அவர்களையும் நாம் ஒழுங்காகப் பின்பற்றுவது இல்லை என்பது வேறு) தலைவர்களோடு இணைந்து, நம் தேச விடுதலைக்காகப் பாடுபட்ட, தன் உடல், பொருள், உயிர் என அனைத்தையும் துறந்த லட்சக்கணக்கான தியாகிகள் அனைவரையும் நமக்குத் தெரியுமா? பிற்காலத்தில் நம்மைப் பற்றிப் புகழ்ந்து பேசுவார்கள், சிலை வைப்பார்கள், நம் சந்ததியினருக்கு நன்மை செய்வார்கள் என்றெல்லாம் எண்ணியா அந்த பெயர் தெரியாத உன்னத மனிதர்கள் போராடினார்கள்? – யோசி!

தேச நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட லட்சக்கணக்கானோரின் உடல்களின் மீது நின்று கொண்டு இருப்பதால்தான், இன்று உலக அரங்கில் உயர்ந்து நிற்கிறது நம் இந்தியா என்பதை மறந்து விடாதீர்கள். அவர்களைப் போல் வாழ்க்கையையே தியாகம் செய்யக் கூட வேண்டாம். அவர்கள் வாங்கிக் கொடுத்த சுதந்திரத்தைப் பழிக்காமல் இருக்கலாமே! இன்னும் கூட “இரவில் வாங்கினோம் - விடியவே இல்லை” என்று முகாரிகள் பாட வேண்டாமே! “இரவில்தானே வாங்கினோம் - இரவலா வாங்கினோம்” என்று புதிய பூபாளங்கள் பாடலாமே! – யோசி!

உலகின் எல்லா நாடுகளையும் போல், இந்தியாவிலும் பல பிரச்சனைகள் இருக்கின்றன. நான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் ஒன்றை மறவாதீர்கள். சுதந்திரத்திற்காகப் பாடுபாட்டவர்களா இதற்குக் காரணம்? கவிஞர் மு.மேத்தா சொல்வதைப் போல “அவர்கள் கொடுத்துச் சென்றது என்னவோ அட்சய பாத்திரம்தான். நாம்தான் அதைப் பிச்சைப் பாத்திரம் ஆக்கிவிட்டோம்!” நம்மிடையே வாழும் சுயநல அரசியல்வாதிகள், அதிகாரிகளால்தானே நமக்கு இந்தப் பிரச்சனைகள். “இனி இந்த நாட்டில் தலைவர்களுக்குச் சிலை வைக்க வேண்டாம். நாய்களுக்குச் சிலை வைத்து நன்றியினைக் கற்போம்” என்பார் கவிஞர் வைரமுத்து. அப்படி, இந்த நாட்டிற்காக உழைத்த எண்ணற்ற நல்ல உள்ளங்களுக்கு, நாம் நன்றி உணர்வோடு நடந்து கொள்ள வேண்டாமா? – யோசி!

சுதந்திரத்தை அவமதிப்பதாலோ, நமது இந்தியத் திருநாட்டை இழிவுபடுத்துவதாலோ, நமக்கு எந்த நன்மையும் நடந்து விடாது. இன்னும் கொஞ்சம் கடுமையாகவே சொல்கிறேன். இந்த நாட்டை மதிக்காத எவரும், இந்த நாட்டை எந்த வகையிலாவது இழிவு செய்ய நினைக்கும் எவரும், இந்த இந்தியத் திருநாட்டில் வாழத் தகுதியானவர் இல்லை. அவர்களை, இப்பொழுதே நாடு கடத்துங்கள். குறைந்தபட்சம், அப்படிப்பட்டவர்கள் யாரானாலும், அவர்களை உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும் அனுமதிக்காதீர்கள்!

நம்முடைய தேசப்பற்று எங்கே போனது? கார்கில் போரின் போதும், கிரிக்கெட் ஆட்டங்களின் போதும் மட்டும்தான் நமக்கெல்லாம், நாட்டுப்பற்று என்பது வருமா? நாட்டை மதிப்பதும், நாட்டிற்காக உழைத்தவர்களைக் கொண்டாடுவதும், நாட்டை இழிவு செய்வோரை இகழ்ந்து ஒதுக்குவதும், நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவதும்... இவையெல்லாம்தானே நாட்டுப்பற்றின் அடையாளங்கள். ஆனால், நாட்டுப்பற்று மிகுந்தவர்களாகக் காட்டிக் கொள்ளும் நம்மில் ஏராளமானோருக்கு, ஒழுங்காகத் தேசிய கீதம் கூடப் பாடத் தெரியவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. - இதற்கெல்லாம் என்னதான் தீர்வு? – யோசி!

1) தேசத் தலைவர்களை எந்தக் காரணம் கொண்டும், சாதி, மதம், மொழி, மாநிலம் என்றெல்லாம் பிரித்து, அவர்களின் பெருமைகளைச் சுருக்காமல் இருப்போம். (முத்துராமலிங்கத் தேவர், காமராஜ நாடார், தலித் தலைவர் அம்பேத்கார்... இன்னும் வளரும் இந்த கொடுமைகள் வேண்டாம்)
2) நம் இந்திய நாடு குறித்த தீய எண்ணங்களை, முற்போக்கு அல்லது விழிப்புணர்வு என்ற பெயரில் பரப்பி, நல்ல உள்ளங்களில் நஞ்சை விதைத்து, இளைஞர்களின் வாழ்வைக் கருக்காமல் இருப்போம். (உண்மை நிலையைச் சொல்லலாம். ஆனால், அது நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக மட்டுமே இருக்க வேண்டும். தேச விரோதிகளை உருவாக்குவதற்காக அல்ல)
3) இந்தியச் சின்னங்களைக், கொடியைக், கீதத்தைத், தலைவர்களை, நாட்டுக்காக உழைத்த, உழைக்கும் நல்லவர்களை மதிப்போம்.
4) இந்திய சுதந்திர வரலாற்றை, இந்தியா முழுமைக்கும் ஒரே கருத்தாய், நன்மை செய்யும் வித்தாய், மாணவர் நெஞ்சங்களில் பதிப்போம்.
5) “சொர்க்கமே என்றாலும், அது நம்மூரைப் போல வருமா? என்னாடு என்றாலும் அது நம் நாட்டிற்கு ஈடாகுமா?” என்று உள்ளம் உருகத் துதிப்போம்.
6) நமது பிறந்தநாள் போல, இந்துக்களின் தீபாவளி போல, முஸ்லீமகளின் ரம்ஜான் போல, கிறிஸ்தவர்களின் கிறிஸ்துமஸ் போல, இந்தியர்கள் அனைவருக்குமான சுதந்திர தினத்தை, மிகுந்த மகிழ்ச்சியோடும், பொறுப்புணர்வோடும் கொண்டாடுவோம்!
7) “தாயைக் காப்பதும், நாட்டைக் காப்பதும் ஒன்றுதான்” என்று உணர்ந்து, நாட்டு முன்னேற்றத்திற்காக, நாட்டின் குறைகளைக் களையப் பாடுபடுவோம்!

இந்தியனாக வாழ்வதில் பெருமை கொள்வோம்! நாம் இந்தியனாக இருப்பதற்காக, இந்தியா முழுமையும் பெருமை அடையுமாறு செய்வோம்! ஜெய்ஹிந்த்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக