ஒன்றே முக்கால் அடியில் உலகளந்த உத்தமனாகிய வான்புகழ் வள்ளுவன், தனது நூலாம் திருக்குறளில் வழங்கியுள்ள கருத்துகள் விலைமதிப்பு மிக்கன. நாடு, மொழி, இனம், காலம் அனைத்தும் கடந்த அவ்வுலகப் பொதுமறையை ஏற்றாதார், போற்றாதார் எவரும் இலர். அவ்வாறே, புதுக்கவிதையிலும், மரபுக்கவிதையிலும் வல்லவராகவும், திரைப்பாடல்களிலும் இலக்கிய நயத்தை இழையோடச் செய்துவரக் கூடியவருமாகிய வைரமுத்துவும், தன் கவிதைகளில், திருக்குறள் கருத்துகளைத் தன் கருத்துகளாக ஏற்றுப் பதிவு செய்துள்ளார்.
வைரமுத்துவின் கவிதைகளில் திருக்குறள் மற்றும் வள்ளுவன் ஆகிய சொற்களின் பயன்பாடு:
“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று மகாகவி பாரதி போற்றியது போல், வைரமுத்துவும் வள்ளுவனை ஏற்றுகிறார். தனக்கு வேண்டிய மிகச் சிறந்த பொருட்களைக் கேட்பதாக அமைந்த, “அமர்க்களம்” திரைப்படத்தின் ஒரு பாடலில், இராசராசனின் வாள், கண்ணனின் புல்லாங்குழல், மதுரை மீனாட்சியின் கிளி போன்றவற்றைக் கேட்டவர், அதோடு,
“வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்”
என்கிறார். இதன் மூலம் வைரமுத்து வள்ளுவப் பரம்பரை சார்ந்த கவிஞன் தான் எனக் காட்டிக் கொள்வதில் பெருமை கொள்கிறார்.
தனது “துறக்க முடியாத துறவு” என்னும் கவிதையில், இளைஞர்கள் படிக்க வேண்டிய இலக்;கியங்களைக் குறிப்பிடும் போது, வள்ளுவனைப் படிக்க வற்புறுத்துகிறார். அதே தொகுப்பில் இடம்பெறும் “தீ அணையட்டும்” என்ற கவிதையில், சாதிச் சண்டைகளைச் சாடும் போது,
“முன்னே வள்ளுவன், பின்னே பாரதி
முழங்கினர் ஊருக்கு – அட
இன்னும் நீங்கள் திருந்தா விட்டால்
இலக்கியம் ஏதுக்கு?”
என்று “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று வள்ளுவன் பறைசாற்றியதை, அவர் பெயரைக் குறிப்பிடுவதன் மூலம் நினைவூட்டுகிறார் கவிஞர். மேலும், பல திரைப்படப் பாடல்களில், காதலன்-காதலி ஆகியோரின் உறவு நிலையைக் காட்ட திருக்குறளை உதாரணமாகப் பயன்படுத்தியுள்ளார்.
இவை போல இயைபுக்கு மட்டுமல்ல் முரணுக்கும், முதலாவதாக வள்ளுவரையே அழைக்கிறார் வைரமுத்து.
“வாரும் வள்ளுவரே!
மக்கட் பண்பில்லாதவரை
என்ன சொன்னீர்?
மரம் என்றீர்!
மரம் என்றால் அவ்வளவு
மட்டமா?”
என்று “மரங்களைப் பாடுவேன்” என்ற கவிதையில், மரங்களின் மேன்மையைக் காட்ட, வள்ளுவரையே கேள்வி கேட்கிறார். இவ்வாறு, தனது கவிதைகளில் ஆங்காங்கே வள்ளுவர் மற்றும் திருக்குறள் ஆகிய சொற்களை வைரமுத்து பயன்படுத்தியுள்ளார்.
வைரமுத்துவின் கவிதைகளில், திருக்குறளில் வரும் சொற்களின் பயன்பாடு:
கவிஞர் வைரமுத்து, தனது பல கவிதைகளின் தலைப்புகளாகத், திருக்குறளில் பயின்று வரும் பல சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். இதற்கு உதாரணமாக, மெய்ப்பொருள், தவம் போன்ற கவிதைத் தலைப்புகளை எடுத்துக் காட்டலாம். தனது ஒரு கவிதை நூலுக்கு, வள்ளுவனின் சொற்களான, “பெய்யெனப் பெய்யும் மழை” என்பதைத் தலைப்பாக வைத்துள்ளார். அது மட்டுமல்ல. “விலங்கு” என்று தலைப்பிட்ட கவிதையில்,
“ஒவ்வொரு விலங்கும்
உன் ஆசான்!
கற்க
கற்றபின் நிற்க
அதற்குத் தக!”
என்று வள்ளுவரின் சொல்லாட்சியை அப்படியே பயன்படுத்துகிறார். தனது “பாடம்” என்ற கவிதையில், மரம் மனிதனுக்குக் கூறும் அறிவுரையாக,
“இன்னா செய்தார்க்கும் இனியவை செய்”
என்ற வள்ளுவன் வார்த்தைகளையே வார்த்தெடுக்கிறார் வைரமுத்து. தனது ஒரு திரைப்பாடலில்,
“கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள”
என்னும் குறளை அப்படியே வரியாக்கி,
“கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
பெண்ணில் இருக்கு”
(படம்: நேருக்கு நேர்)
என்று வருமாறு எழுதியுள்ளார்.
மேலும், தனது “பால்வினையாளி” என்ற கவிதையில், ஒரு முழு திருக்குறளையும் சொல்லி, அதில் ஒரே ஒரு சொல்லை மட்டும் மாற்றித், தனது கருத்தை வெளிப்படுத்துகிறார் கவிஞர். அக்கவிதையில், ஒரு பரத்தை, தன் வாடிக்கையாளரிடம் கூறும் பதிலாகத்,
“தக்கார் தகவிலார் என்பது அவரவர்
உச்சத்தாற் காணப் படும்”
என்று, குறளில் வரும் “எச்சத்தால்” என்னும் சொல்லை மட்டும் மாற்றி, “உச்சத்தால்” என்றிட்டுப், புதுக்குறள் படைக்கிறார் வைரமுத்து.
இதுபோல, குறள் வார்த்தைகளில் மட்டுமல்ல் கருத்திலும் மாறுபாடு கொண்டுள்ளதையும், குறளில் வரும் வார்த்தைகளாலேயே கூறுகிறார். தனது “ஆதலால் மனிதா!” என்ற கவிதையில்,
“பிறவி என்பது பெருங்கடலன்று:
எண்ணிப் பார்த்தால் சின்ன வாய்க்கால்”
என்று, வள்ளுவரின் வாக்கான “பிறவிப் பெருங்கடல்” என்பதை வைரமுத்து மறுக்கிறார். இவ்வாறு ஏராளமான இடங்களில், குறள் வரிகளை, சொற்களை அப்படியே கையாண்டுள்ளார் கவிஞர் வைரமுத்து.
வைரமுத்துவின் கவிதைகளில், திருக்குறள் கருத்துகளின் பயன்பாடு:
கவிஞர் வைரமுத்து, தனது “மௌனத்தின் சப்தங்கள்” என்ற நூலில், தான் திருக்குறள் உட்பட பல இலக்கியக் கருத்துகளைப் பயன்படுத்தியுள்ளதாகக் கூறுகையில், கீழ்க்கண்டவாறு வாக்குமூலமளிக்கிறார்.
“திருக்குறளைப் படிக்க வாய்ப்பில்லாதவன் கூட, திரைப்படப் பாடல்களைக் கேட்க வாய்ப்பிருக்கிறது. அவனுக்குத் திருக்குறளை நேரடியாகக் கற்றுத் தருவதை விட, திரைப்படப் பாடல் மூலம் கற்றுக் கொடுப்பது எளிது” என்று விளக்குகிறார். அவரே, அவரது பாடல் ஒன்றை உதாரணமாகவும் தருகிறார்.
“வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்”
என்ற திருக்குறளின் கருத்தை, எளிய திரைப்படப் பாடலாக்கி,
“மாலை சூடும் தேதி எண்ணிப் பத்து விரலும் தேயும்”
(படம்: பாலைவனச் சோலை)
என்று தான் வழங்கியிருப்பதைக் காட்டுகிறார்.
இதுமட்டுமல்லாது,
“மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது”
(படம்: முத்து)
போன்ற பல திரைப்படப் பாடல் வரிகள் மூலம், வள்ளுவரின் கருத்துகளான நிலையாமை, கொல்லாமை, ஈகை, ஒழுக்கமுடைமை, அடக்கமுடைமை, பணிவுடைமை, ஊக்கமுடைமை, ஆள்வினை உடைமை உள்ளிட்ட பல்வேறு வாழ்க்கை நெறிகளையும், நம் நினைவில் நிற்கும் வகையில், எளிமையான, வசதியான வடிவில் வைரமுத்து வழங்கியுள்ளார்.
திரையிசைப் பாடல்களில் மட்டுமின்றித், தனது கவிதைகளிலும், திருக்குறள் கருத்துகளைப் பிரதிபலிக்கிறார். “பாரதி நினைக்கப்படுகிறான்” என்ற கவிதையில்,
“தம்போல்
பகுத்துண்டு வாழும்
பண்பிலாமையால்
காக்கையும்
குருவியும்
மனிதனை இப்போது
மறுதலிக்கின்றன”
என்று கூறி,
“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”
என்ற குறளின் கருத்தை வலியுறுத்துகிறார்.
தனது “கூடு” என்ற கவிதையில், தன் வீட்டை இடிக்கும் அதிகாரிகளிடம் அழுது புலம்பும் ஒரு ஏழைத்தாய், இறுதியில் அதைத் தடுக்க முடியாது என உணர்ந்து, தன் மகள் நட்டு வைத்த மல்லிக் கொடியையாவது காப்பாற்ற வேண்டி,
“ஆசையில வச்சகொடி
அசங்காம இருக்கட்டும்;
அவவச்ச மல்லிகைதான்
எவளுக்கோ பூக்கட்டும்”
என்று மன்றாடுகையில், “ஒப்புரவறிதல்” என்ற வள்ளுவனின் அதிகாரத்திற்குப், புதிய விளக்கவுரையை வைரமுத்து எழுதுகிறார்.
இவ்வாறு வைரமுத்து சொல்நிலையிலும், கவிதைக்குத் தலைப்பிடும் நிலையிலும், பகுதியாகவும், முழுமையாகவும் குறளடிகளைக் கையாளும் நிலையிலும், எடுத்தாண்டுள்ளார். சிற்சில இடங்களில், தேவைக்கேற்ப சொற்களை மாற்றியும், புதுக்குறள் புனைந்துள்ளார். இயைபு, முரண் ஆகிய இருநிலைகளிலும் வள்ளுவர் கருத்துகளைக் கையாண்டிருப்பது அவரின் திருக்குறள் பற்றிற்குக் காட்டாக விளங்குகிறது.
மொத்தத்தில், திருக்குறளை மீண்டும், மீண்டும் மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில், வைரமுத்து, தன் படைப்புகளையும், திரையிசைப் பாடல்களையும் வடிவமைத்துள்ளார் என்பது உறுதியாகிறது.
சனி, 13 ஆகஸ்ட், 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நல்ல ஆய்வு முருகபாரதி! இவ்வளவு ஆழமாக வள்ளுவனையும் , வைரமுத்துவையும் இணைத்து இதுவரை பார்த்ததில்லை.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்!
முடிந்தால் உங்கள் படைப்பை அவருக்கு அனுப்புகிறேன்.
என் தளம் www.surekaa.com என்று மாற்றியுள்ளேன். கருத்து சொல்லவும்.