சனி, 24 ஜூலை, 2010

மரணம் சொல்லும் வாழ்க்கை!

“எப்பொழுதும் சாவைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதால் எனக்கு வாழ்க்கையின் அர்த்தம் புரிந்திருக்கிறது” என்ற அந்த மனிதரின் பேட்டியைப் பார்த்ததும், என்னால் வியப்பை அடக்க முடியவில்லை. எந்த லட்சியமும், கட்டுப்பாடுகளும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும், ஒரு மரண கானா பாடகர், அந்த விஜய் டி.வி. நிகழ்ச்சியில், சொன்ன பல விஷயங்கள், என்னைப் பலவாறும் சிந்திக்கத் தூண்டியது.

பொதுவாக நாம் எல்லாரும் சொல்வோம் - நமக்கெல்லாம் பிறந்த தேதி தெரியும், இறக்கும் தேதி தெரியாது என்று. ஆனால் உண்மையிலே யோசித்துப் பார்த்தால், நாம் பிறந்த பின்னர்தான், நமக்குப் பிறந்த தேதி தெரியும். அதற்கு முன் தெரியாது. அதே போல் தான், இறக்கும் வரையில், நம் இறந்த தேதியும் தெரியாது. வாழ்க்கையை மிகவும் சுவாரஸ்யமாக்கும் இரகசியமே அதுதானே! கண்ணதாசன் கூட சொல்வாராம் - “எனக்கு சாவைக் கண்டு பயமில்லை. ஏனென்றால் நான் இருக்கும் வரை அது என்னிடம் வரப்போவதில்லை. சாவு வரும்போது, நான் இருக்கப் போவதில்லை” என்று.

நாம் அனைவருமே, சாவைப் பற்றிப் பயப்படுகிறோம். கவலைப்படுகிறோம் அல்லது குறைந்தபட்சம் சிந்திக்கிறோம். யோசித்துப் பார்த்தால், நம்மை, நம் மரணத்தைத் தவிர, மற்ற எல்லா மரணங்களும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கிறது. சுனாமியின் சீற்றத்தால் உயிரிழந்தோர், இலங்கை இராணுவத்தால் அழித்தொழிக்கப்படும் தமிழ் இனம், குண்டுவெடிப்புகள், வன்முறைகள், கொலைகள், விபத்துகள் மற்றும் நோய்களினால் மாண்டு போவோர் என்று நித்தம் நித்தம், செய்திகளின் வழியே நாம் அறியும், நமக்கு நேரடியான உறவோ, தொடர்போ இல்லாத எல்லா மனிதர்களின் மரணங்களும், நம்மைக் கலங்க வைக்கிறது. வைக்க வேண்டும். அப்போதுதான், நம்மிடம் மனித நேயம் மிச்சம் இருக்கிறது என்று பொருள்.

மேற்சொன்ன மரணங்கள் ஒரு சில நிமிடங்களில், நம் எண்ணங்களை விட்டு அகன்று விடுகின்றன. ஆனால், நம் நெருங்கிய உறவினர் அல்லது நண்பரின் மரணம், சில நேரங்களில் நம் வாழ்க்கையையே பாதிக்கிறது. மரணம் என்பது இயற்கையானது, தவிர்க்க முடியாதது, வள்ளுவர் சொல்வது போல், இந்த உலகமே “நெடுநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை படைத்தது” என்பன போன்ற உண்மைகளை நாம் அனைவரும் அறிவோம். இருந்தாலும், நாம் ஏன் இந்த மரணங்களால் பாதிக்கப்படுகிறோம்? – யோசி!

ஒரு பக்கம் பார்த்தால், மரணம் அடைந்தவரின் சடலத்தருகே இருந்து கொண்டு, இரவு பகலாக ஒப்பாரி வைக்கிறோம். இன்னொரு பக்கம் பார்த்தால், பிணத்தின் முன் ஆடுகிறோம், வெடி வெடிக்கிறோம், படையல் என்று விருந்து உண்கிறோம். சற்றே குழப்பமாகத்தான் உள்ளது. நாம் மரணத்தை வெறுக்கிறோமா அல்லது கொண்டாடுகிறோமா..?

என்னைப் பொறுத்தவரை, மரணம் என்பது கூட, பல் துலக்குவது, குளிப்பது போன்ற ஒரு சராசரி நிகழ்வே ஆகும். அதைக் கண்டு நாம் பயப்படுவதோ, கவலைப்படுவதோ, கொண்டாடுவதோ, வெறுப்பதோ பயனில்லாதது. நான், இந்த சமூகத்தில் காணப்படும் பல அவலங்களை எண்ணிப் பலவாறும் கவலைப்பட்டிருக்கிறேன். எனது பலநாள் உறக்கங்களைத் தொலைத்திருக்கிறேன். ஆனால், மரணங்கள் என்னை ஒருபோதும் பாதித்தது இல்லை. எந்த சாவு வீட்டிற்கும் சென்று நான் அழுததே இல்லை. அவ்வளவு ஏன்? இந்த உலகிலேயே, நான் மிகவும் நேசிக்கும் உயிரான என் அம்மாவிடமே, நான் சொல்வதுண்டு “நீ செத்தால் கூட, நான் அழ மாட்டேன்” என்று.

உடனே, என்னை இரக்கமே இல்லாத அரக்கன், அன்பே இல்லாத ஜடம் என்றெல்லாம் எண்ணிவிடாதீர்கள். நான் கொஞ்சம் பிராக்டிக்கலாக எதையும் அணுகுபவன். அவ்வளவுதான். மரணமடைந்தவர்களுக்காக அழுவதை விட, அந்த மரணத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், உறவினர்களுக்கு ஆறுதல் சொல்வதையும், உதவி செய்வதையுமே முக்கியமாக எண்ணுபவன் நான். மரணத்தைக் கண்டு பயப்படுவர்களாலும், கவலைப்படுபவர்களாலும் எந்த உதவியையும் செய்ய முடியாது. விவேக் ஒரு படத்தில் இதையே கிண்டலாகச் சொல்வார் “நம்மாளுங்க, இருக்கும் போது தண்ணி கூட தரமாட்டார்கள். ஆனால், செத்தபிறகு பால் ஊற்றுவார்கள்” என்று.

பல நேரங்களில், உணர்ச்சிகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, நாம் அறிவுக்கு வழங்குவதில்லை என்னும் கருத்துடையவன் நான். சற்றே சிந்தியுங்கள். நம் வீட்டில் ஒருவருக்கு உடல்நலம் சரியில்லை என்றால் என்ன செய்வோம்..? அழுவதாலோ, புலம்புவதாலோ, ஊரைக் கூட்டுவதாலோ ஏதாவது பயன் கிடைக்குமா? அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, உரிய சிகிச்சை அளிப்போம். நோயாளி உடல் நலம் பெறும் வரை, நம்பிக்கையை மட்டுமே அளிப்போம். அளிக்க வேண்டும். அப்படியிருக்க, மரணத்தின் போது மட்டும், ஏன் இந்தச் சிக்கல்கள்...? – யோசி!

என்னைப் பொறுத்தவரை, மரணத்தின் மீது நாம் செலுத்தும் கவனத்தை விட, அதிகமாக, வாழ்வதில்தான் செலுத்த வேண்டும். மரணம் என்பதே, நாம் வாழும் நாட்களைப் பயனுள்ளதாகவும், மகிழ்ச்சிகரமாகவும் செலவழிக்க வேண்டும் என்று நமக்கு நினைவூட்;டுவதற்கான ஒரு அடையாளம்தான். அதனால்தான், குறித்த காலத்திற்குள் செய்ய வேண்டியவற்றை, “டெட் லைன்” என்கிறோம். நான் செய்ய நினைத்த பலவற்றை, உடனே செய்து விடுவேன். என்றாவது ஒருநாள், எதிர்காலத்தில் என்றெல்லாம் நான் எதையும் வைத்துக்கொள்ளவில்லை. குறிக்கோள் இல்லாத வாழ்க்கையைப் பற்றி நான் சொல்லவில்லை. ஆனால், மிகவும் நீண்ட காலத்திற்கு நான் திட்டமிடுவது இல்லை என்றே சொல்கிறேன்.

அதனால்தான், நிறைய பணம் சேர்ப்பதற்கு முன்னதாகவே, ஒரு அறக்கட்டளையைத் தொடங்கி, யாரிடமும் நன்கொடை பெறாமல், கடந்த 4 ஆண்டுகளாக பல உதவிகளைச் செய்து வருகிறேன். விருது வாங்க வேண்டிய வயதில், ஆண்டுதோறும், சிறந்த ஆசிரியர்களைத் தேர்;ந்தெடுத்து, விருது வழங்கிக் கொண்டிருக்கிறேன். காரணம் ஒன்றுதான். நாளையே நான் இறக்க நேர்ந்தாலும், நான் வருத்தத்தோடு, ஏதாவது ஒரு நல்ல காரியத்தைச் செய்ய முடியாத ஏக்கத்தோடு இறக்கக் கூடாது என்று நினைக்கிறேன். என்னால் என்ன முடியுமோ, அதைக் காலந்தாழ்த்தாமல் இப்போதே செய்கிறேன். அதனால்தான் வாழ்க்கை எனக்கு மிகவும் மகிழ்ச்சிகரமாக உள்ளது. நீங்களும், காலம் கடத்தாமல், நல்ல செயல்களை, உங்களால் முடிந்த சமூகப் பணிகளை உடனே செய்யுங்கள்.

“நீங்கள் எதை இழந்தீர்கள் என்பதல்ல, உங்களிடம் என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்” என்ற மிகச்சிறந்த அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங்-கின் வாழ்க்கை எனக்குத் தந்த மந்திரச் சொற்களும், “மண்ணில் எட்டு நாள் வாழ்ந்திடும் பட்டாம்பூச்சி அழுவது கிடையாது. வாழும் நாளைச் சார்ந்தது, வாழ்க்கை என்பது” என்னும் திரைப்பாடலும், ஒவ்வொரு நாளும் என் உற்சாகத்தை வற்றாமல் காத்து வருகின்றன. ஒரு கோப்பைத் தேநீரையும் அனுபவித்துக் குடிக்கும் ஜென் துறவி போல, இந்தக் கணத்திலேயே நான் வாழ்கிறேன்.


“என்னடா துன்பம் அதை எட்டி உதை, வாழ்ந்து பார்!
எப்போதும் உன்னை நம்பி!
இடுகாடு போன பின் நடுவீடு அழைக்குமோ?
ஏறி விளையாடு தம்பி!”

என்ற பாடலுக்கேற்ப, மரணத்தை விட, வாழ்க்கையையே அதிகமாக சிந்திக்கிறேன். வாழ்பவர்களையே அதிகமாக சந்திக்கிறேன். எல்லாத் துன்பங்களிலும், பிரச்சனைகளிலும் எப்போதும் நான் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவுமே வாழ்கிறேன். என்னை விட, மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் நீங்களும் வாழ என் வாழ்த்துக்கள்!

1 கருத்து: