செவ்வாய், 6 ஜூலை, 2010
பேருக்காக சேவை...?
“ஊருக்கு உழைத்திடல் யோகம்” என்றார் மகாகவி பாரதி. “சேவை செய்வதே ஆனந்தம்” என்று வாழ்ந்த மிகப்பெரிய, அரிய மனிதர்கள் பலர் நம்மிடையே உண்டு. ஆனால், இன்று சமுதாய சேவையின் நிலை என்ன?
இந்த சமூகத்தைப் பொறுத்தவரை, நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கும் எல்லா வசதிகளும், வாய்ப்புகளும், நலங்களும், இன்பங்களும், நமக்கு உறவில்லாத, சொல்லப்போனால்... தொடர்பே இல்லாத பலரின் போராட்டங்களால், தியாகங்களால், சமூக நோக்கால், உயரிய சிந்தனைகளால், பொதுநலத் தொண்டுகளால் விளைந்தவை என்பதை நாம் மிகச் சுலபமாக மறந்துவிட்டதன் விளைவுதான், இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பங்கள் அனைத்தும்.
போராடவும், சேவை செய்யவும், தியாகம் செய்யவும் யாரோ சில இளிச்சவாயர்கள் நமக்கெல்லாம் எப்போதும் வேண்டும். ஆனால், நாம் மட்டும் இவை எவற்றிலும் பங்கெடுக்காமல், அதன் நற்பலன்களை மட்டும் அனுபவிக்கும் சாறுண்ணிகளாக, ஒட்டுண்ணிகளாக .... மன்னிக்கவும்.... மற்றவர்களின் இரத்தத்தை உறிஞ்சி உயிர் வாழும் ரத்தக் காட்டேரிகளாக சுக வாழ்வு வாழ வேண்டும். என்ன ஒரு தீய எண்ணம்...? என்ன ஒரு மோசமான வாழ்க்கை...?
நாம் அரசியல் சுதந்திரம் பெறுவதற்குக் கூட பல்லாண்டுகள் தாமதம் ஆனதற்கு, நம்முடைய இந்த எண்ணம்தான் காரணம். முப்பது கோடி இந்தியர்களும், அப்போதே ஒன்று திரண்டு, ஓரணியில் உழைத்திருந்தால், ஒரே மாதத்தில் ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு ஓடியிருப்பார்கள். ஆனால், நம் முன்னோர்களில் ஏராளமானோர், அப்போதும் அவனிடம் அடிமைகளாய் ஊழியம் செய்து, ஊதியம் பெற்றுக் கொண்டுதானே இருந்தனர்.
கல்வி, வேலைவாய்ப்பு, அறிவியல், சமத்துவம், உடல்நலம், வாழ்க்கைத் தரம் என இன்னும் அனைத்துத் துறைகளிலும், இந்தியா போக வேண்டிய தூரமும், எட்ட வேண்டிய உயரமும் மிக அதிகம். அதற்கு சிலர் மட்டும் உழைத்தால் போதாது. எல்லோரும் ஒன்று சேர வேண்டும்.
உடனே, நான் ஏதோ உங்கள் எல்லோரையும், உங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்துவிட்டு, மகாத்மா காந்தியைப் போலவோ, மதர் தெரசாவைப் போலவோ சமுதாயப் பணிகளில் ஈடுபடச் சொல்வதாய் எண்ணிவிடாதீர்கள்! நடைமுறையில் எல்லாருக்கும் அது சாத்தியமில்லை என்பது எனக்கும் தெரியும். ஆனால், அதற்காக, முழுவதுமான ஒரு சுயநல வாழ்வை மட்டுமே வாழ்வது எந்த விதத்தில் நியாயம் என நீங்களே சொல்லுங்கள்! யோசி...!
“இந்த உலகில் நாம் வாழ்வதற்காகத் தரும் வாடகைதான் சேவை” என்ற கோணத்தில் பார்த்தால், நாமெல்லாம் எத்தனை ஆண்டுகளாக, வாடகையை முறையாகத் தரவில்லை என சிந்தியுங்கள். இதில் மிகப்பெரிய கொடுமை... சமுதாய சேவை செய்பவர்களை நாம் நடத்தும் விதம்தான்...!
சேவை செய்பவர்களை, வேலை இல்லாதவர்கள், பொழுது போகாதவர்கள், ஊர் வம்புக்காக அலைபவர்கள், பொறுப்பில்லாதவர்கள், அவர்கள் பேருக்காக செய்கிறார்கள், பெயர் - புகழுக்காக செய்கிறார்கள், விளம்பரத்திற்காக செய்கிறார்கள், சுய லாபத்திற்காக செய்கிறார்கள் என எத்தனை விதமாகக் கிண்டலும், கேலியும், விமர்சனமும் செய்கிறோம்... இதுவரை நாம் எச்சில் கையால் காக்கை விரட்டாதவர்கள் என்ற எந்தவிதமான குற்ற உணர்வும் இல்லாமலே...
சமீபத்தில் நான் ரோட்டரி சங்கத்தின் தலைவராகப் பணியேற்றேன். விழா அழைப்பிதழ் கொடுக்கப் போனபோது, ஒரு ஆடிட்டர் என்னிடம் மிகுந்த அக்கறையுடன் சொன்னார். “இதையெல்லாம் விட்டுடுங்க தம்பி. இன்னிக்கு நாலு பேரு புகழும்போது நல்லாத்தான் இருக்கும். ஆனால், பணம் இருந்தாத்தான் மதிப்பு. பணம் இருந்தால், பதவி, புகழ் எல்லாம் தானே வரும். அதனால உருப்படியா ஏதாவது வேலையைப் பாருங்க” என்று. அந்த ஆடிட்டர் மட்டுமல்ல. இதே கருத்தை அவரவர் பாணியில் பலர் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். நான் பல அமைப்புகளில் பல பொறுப்புகளை வகித்துவிட்டேன். நிறையப் புகழும் அடைந்திருக்கிறேன். சேவை செய்வதினால் இவை எல்லாம் கிடைத்திருக்கலாம். ஆனால், அதற்காக எல்லாம் நான் சமூக சேவை செய்வதில்லை. அதாவது நான் பணியாற்றுவதற்குத்தான் ஊதியம் பெறுகிறேனே தவிர, ஊதியத்திற்காக எந்தப் பணியையும் செய்வது இல்லை. இன்னும் புரியும்படி, கொஞ்சம் லோக்கலாகச் சொன்னால், நான் சாப்பிட்டு, செரித்தது போக மிச்சக் கழிவினை வெளியேற்றுவதற்காகத்தான் மலம் கழிக்கிறேனே தவிர, மலம் கழிப்பதற்காக சாப்பிடுவது இல்லை.
அதே வேளையில், எனக்குப் பெயருக்காக, (பேருக்காக அல்ல) புகழுக்காக சேவை செய்பவர்களையும் குறை கூறுவதில் உடன்பாடில்லை. ஏனென்றால், புகழுக்காக ஒரு பணியைச் செய்பவர்கள், நிச்சயமாக மோசமான செயலைச் செய்ய மாட்டார்கள். பணம், பதவி, அதிகாரம், ஆடம்பரம், சொத்து, சுகம், மோகம் போல புகழும் ஒரு போதைதான். ஆனால், புகழ் என்பது மற்ற போதைகள் போல, ஒருக் காலத்திலும் மற்றவர்களுக்குக் கேடு செய்யாது. புகழை விரும்பும் யாரும் பழிகொள்ள விரும்ப மாட்டார். உதாரணமாக, ஒரு காலத்தில், அரசியலில் பெரும் செல்வந்தர்கள் மட்டுமே ஈடுபட்டனர். அரசியலைப் பயன்படுத்தி சம்பாதிக்க வேண்டிய தேவையில்லாமல் இருந்ததால், அவர்கள் புகழுக்காக மட்டுமே அரசியல் செய்தனர். அதனால் புகழ்தரக்கூடிய, மக்களிடம் மதிப்புப் பெறக்கூடிய செயல்களை மட்டுமே செய்தனர். ஆனால், தற்போது என்ன நடக்கிறது. அரசியலில் ஈடுபடுவதே பணம் சம்பாதிக்கத்தான் என்ற முடிவோடுதான் நடந்து கொள்கின்றனர். மானம், வெட்கமே பார்க்காத இவர்கள், புகழைப் பற்றியா கவலைப் படுவார்கள்? அதனால், நல்ல செயல்களைச் செய்யாமல் இருப்பதோடு மட்டுமில்லை, எல்லாவிதமான மோசமான, தீய செயல்களையும் எந்தவிதமான தயக்கமும் இன்றிச் செய்கிறார்கள். (இந்தக் கருத்தையும், செல்வந்தர்கள் மட்டுமே அரசியலில் ஈடுபடலாம் என்று நான் சொல்வதாகப் புரிந்து கொள்ளாதீர்கள். அரசியலுக்கு வருவதன் நோக்கம் பற்றி மட்டுமே இக்கருத்து)
எல்லாப் பணிகளிலும், தவறு செய்பவர்கள் எப்போதும் இருப்பார்கள். அதற்காக, எல்லாரையும் குறை சொல்லக் கூடாது என்பது நாம் அறிந்ததே. நாடோடிகள் படத்தில் வரும் நகைச்சுவை நடிகர் போல், சிறிய சேவை செய்தாலும், பெரிய அளவில் பேனர் வைத்து விளம்பரம் செய்யும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை அதில் கூட நான் குற்றம் காண்பதில்லை. எதுவும் செய்யாமலே இருப்பவர்களை விட, ஏதாவது உருப்படியான சமூக சேவையை செய்துவிட்டு, விளம்பரம் செய்துகொள்பவர்களை நான் பாராட்டுகிறேன். ஏனென்றால், ஒரு சேவை எதற்காக செய்யப்படுகிறது என்பதை விட, அதனால் விளையும் நற்பலன்கள் என்னென்ன என்றே நான் கணக்கிடுகிறேன். எந்தத் தீமையும் இல்லாத, உண்மையாக பலன்தரும் ஒரு பொதுநல சேவை, பேருக்காகவோ, பெயர்-புகழுக்காகவோ, விளம்பரத்துக்காகவோ அல்லது சுயலாபத்துக்காகவோ, எதற்காக செய்யப்பட்டாலும் பரவாயில்லை. தயவுசெய்து அதை ஊக்கப்படுத்துங்கள். குறைகள் இருந்தால் கூட, குறைகளைச் சரி செய்வதே உங்கள் நோக்கமாக இருக்கட்டும். சேவை செய்பவரைக் குற்றவாளி ஆக்கி, சேவையைத் தடுத்து விடாதீர்கள். அரசாங்கம் செய்யும் பல திட்டங்கள் கூட, இந்த முறையில்தான் வீணாகிறது என்பதை மறவாதீர்கள்.
“இருட்டைக் குறை சொல்வதை விட, ஒரு மெழுகுவர்த்தியையாவது ஏற்றி வைப்பதே மேலானது!”
நான் எனது 14-ஆம் வயது முதல், கடந்த 15 ஆண்டுகளாகத், தொடர்ந்து பல சமுதாய சேவைகளைச் செய்து வருகிறேன். ஆனால், அந்த இளம் வயதிலேயே, என்னை சமுதாய சேவையில் ஈடுபடுத்திய பெருமைக்குரிய என் அண்ணன், தற்போது அதையே வெட்டி வேலை என்கிறார். பணம்தான் இந்த உலகில் மதிப்பைத் தரும் என எனக்கே உபதேசம் செய்கிறார். காரணம்...? சேவைக்குரிய மதிப்பும், அங்கீகாரமும் இந்த சமுதாயத்தில் தரப்படவில்லை என்பதுதான்.
பொதுவாகவே, சமுதாய சேவை செய்பவர்கள், தங்கள் பணம், பொருள், உழைப்பு, நேரம், தங்கள் சுகம், தங்கள் குடும்பம், தங்கள் வேலை என பலவற்றைத் தியாகம் செய்துதான் சேவை செய்ய முடியும். இந்த சமுதாயம் அவர்களுக்குத் தரும் ஒரே பிரதிபலன் மதிப்பு, மரியாதை அல்லது புகழ். விவேக் ஸ்டைலில் சொன்னால், “இந்த உலகத்துல இருக்கும் போது தவிச்ச வாய்க்குத் தண்ணி கூட கொடுக்க மாட்டார்கள். ஆனால் செத்த பிறகு பால் ஊற்றுவார்கள்”. காமராஜருக்கும், காந்தியடிகளுக்கும் நாம் அதைத்தான் செய்தோம். அய்யா, அந்த மதிப்பையும், புகழையுமாவது தர வேண்டாமா? அதைக் கூட செய்வதற்கு யோசித்தால் எப்படி...?
இன்று செல்வம் படைத்தவர்கள் எல்லாம் செல்வாக்குப் படைத்தவர்களாகி விட்டார்கள்! பணம் படைத்தவர்கள் எல்லாம் பாராட்டுக்கு உரியவர்களாகி விட்டார்கள்! அதிகாரம் படைத்தவர்கள் எல்லாம் ஆண்டவனாகி விட்டார்கள்! கடமையைச் செய்பவர்களுக்குக் கூடக் கையூட்டாய்ப் பொருளும், புகழும் தரும் காலமிது! இந்த நிலையில், உண்மையாக, உருப்படியாக ஒரே ஒரு பொதுநலச் சேவை செய்திருந்தாலும் பரவாயில்லை... அவரைப் பாராட்டுங்கள்... போற்றுங்கள்... பாராட்டு விழாக்களுக்காகவாவது, மக்களுக்கு நல்ல திட்டங்கள் கிடைத்தால் நன்மைதானே! அதனால் மேலும் சேவை செய்வோர் எண்ணிக்கையும், சேவைகளின் எண்ணிக்கையும் கூடும்.
எனவே, சேவையே பேருக்காக... அதாவது பிறருக்குப் பயனில்லாமல் இருக்கக் கூடாதே தவிர, ஒருவர் தன் பெயருக்காக... அதாவது புகழுக்காக சேவை செய்வதில் எந்தத் தவறும் இல்லை. சேவை செய்வதை விந்தையான ஒரு செயலாகப் பார்ப்பதை நிறுத்தி, நாம் எல்லாரும் வழக்கமாக்கினால், நாட்டுக்கும் நமக்கும் நன்மைதானே!
தெலுங்கில் வெளிவந்த ஸ்டாலின் திரைப்படத்தில், ஹீரோ சிரஞ்சீவி, தான் ஒவ்வொருவருக்கு உதவி செய்யும் போதும், பிரதிபலனாக, அவர்களை மூன்று பேருக்கு உதவி செய்யச் சொல்வாராம். அது போலவே, நாம் கூட சேவை செய்வதை ஒரு வழக்கமாகவும், பழக்கமாகவும் மாற்ற முடியும். சாலை விபத்தில் இறந்து போன ஹிதேந்திரன் என்ற இளைஞனின் பெற்றோர், அவனது உடல் உறுப்புகளைத் தானமாகக் கொடுத்துப், பலருக்கும் வாழ்வளித்த ஈடு இணையற்ற அருஞ்செயலை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், அந்த இளைஞனின் இதயம், அபிராமி என்ற ஒரு சிறுமிக்குப் பொருத்தப்பட்டது. விதியின் கொடுங்குணத்தால், அச்சிறுமி இரண்டு ஆண்டுகளில் இறந்து போனாள். இறந்தவுடனே, அவளது கண்கள் தானமாகக் கொடுக்கப்பட்டன என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்...?
இந்தக் கட்டுரையைப் படிப்பவர்களுக்கு என்னுடைய வேண்டுகோள்:
ஒருவரின் சேவைகள் உண்மையானதா, போலியானதா என்று சரியாகத் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. பாராட்டுங்கள். ஏனென்றால், நூறு போலி சேவையாளர்களை நீங்கள் அங்கீகரித்தால் கூடத் தவறல்ல. ஆனால், ஒரே ஒரு உண்மையான சமூக சேவகரை நீங்கள் அங்கீகரிக்காமல், பாராட்டாமல் விட்டுவிட்டால் கூட, நாளைய சமுதாய முன்னேற்றத்தை அது கட்டுப்படுத்தும். மட்டுப்படுத்தும்.
உண்மையான சேவை செய்பவர்களைப் போற்றுங்கள். பாராட்டுங்கள். மதிப்பளியுங்கள். புகழுங்கள். அங்கீகாரம் செய்யுங்கள். அது மட்டுமே சேவை செய்பவர்களையும், சேவை செய்யும் எண்ணத்தையும், அதிகரிக்கும், வலுப்படுத்தும். அதன் மூலம் நம் வாழ்வும், சமூக நிலையும் சிறக்கும், உயரும்.
சேவை செய்வோருக்கு என் பணிவான வேண்டுகோள்:
தயவுசெய்து, உண்மையாகவே மற்றவர்களுக்குப் பயனில்லாததையோ, செய்யாததையோ, நல்லன அல்லாததையோ சேவை என்று சொல்லவோ, விளம்பரப்படுத்தவோ செய்யாதீர்கள். அதனால், உண்மையான சேவை செய்பவர்களுக்கான மரியாதை முற்றிலும் குறைகிறது. உங்களால் பாதிக்கப்பட்டு, உண்மையான சேவை செய்பவர்கள் நிறுத்திவிட்டால், உலகமே பாதிக்கப்படும்.
அதேபோல், உண்மையான சேவை செய்பவர்கள், “உலகம் இப்படித்தான்” என்பதை உணருங்கள். எந்தக் காரணத்திற்காகவும், உங்கள் சேவைகளை நிறுத்தி விடாதீர்கள். தொடர்ந்து செய்யுங்கள். உங்களால்தான், இந்த உலகமே அழியாமல் இன்றும் இருப்பதாக நான் சொல்லவில்லை. புறநானூற்றுப் பாடலின் வழியாய்த், தமிழ் மொழியே சொல்கிறது. நம்புங்கள். என்றும் நம்பிக்கையோடு செயல்படுங்கள். நாளை நல்லபடியாய் விடியும்! நம்மால் முடியும்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக