சனி, 19 ஜூன், 2010

விந்தை மனிதர்கள் - 1

ஆம்! நம்முடைய வாழ்க்கை முறையில்தான் எத்தனை விசித்திரங்கள். பொதுவாக ஞானிகள் சொல்வார்கள்... வாழ்க்கை விசித்திரமானது என்று! அந்த வாழ்க்கையையும் எத்தனை விதமாக, வித்தியாசமாக, விசித்திரமாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த விந்தை மனிதர்களைப் பார்த்தால் எனக்கும் விந்தையாக, வியப்பாகத்தான் இருக்கிறது. நாம் வாழும் முறைகளில் காணப்படும் விந்தைகளைத், தங்கள் சிந்தைகளைத் தொடுமாறு, நல்ல செயல்களில் கொண்டு விடுமாறு சொல்வதே இத்தொடரின் பணியாகும். தங்கள் கருத்துகளே இத்தொடருக்கு அணியாகும்.

சாதனையாளர்களை வியக்கின்றோம்! ஆனால்... சராசரிகளாகவே வாழ விரும்புகின்றோம்!!

மனிதர்கள் கூடும் இடங்களில் எல்லாம், நாம் பேசுகின்ற பொருளாகப் பிரபலமானவர்களும், சாதனையாளர்களுமே இருக்கிறார்கள்! ஆனால் நம்மில் பெரும்பாலானோர், அந்தச் சாதனைகளைச் செய்ய விரும்புவதில்லை! விரும்புபவர்களை வளர்ப்பதுமில்லை!

என்ன... ஆச்சரியமாக இருக்கிறதா? அவசரப்பட்டு இல்லை என்று மறுக்காதீர்கள்! ஏன் என்றால் அதுதான் உண்மை! நாம் டெண்டுல்கர் செஞ்சுரி அடிப்பதைப் பார்த்து வியக்கிறோம். அது பற்றிப் பல்வேறு விதமாக விவாதிக்கிறோம். ஆனால், நம் பிள்ளைகள் கிரிக்கெட் விளையாடுவது நமக்குப் பிடிக்காது! “இன்று சூப்பர் ஸ்டார் நீச்சல் குளத்தில் குளித்தார்” என்பது போன்ற ரஜினிகாந்தைப் பற்றிய உப்புச்சப்பில்லாத, சாதாரணமான செய்திகளைக் கூடத் தேடிப் படித்துவிட்டு, ஆச்சரியமாக அதைப் பற்றிப் பேசுகிறோம். ஆனால், நம் உறவினர் யாரேனும் சினிமாத் துறையில் பணியாற்றப் போவதாகச் சொன்னால், “உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?” என்றோ, “பையன் கெட்டுப்போயிடுவான். பார்த்துக்கங்க” என்றோ அறிவுரை சொல்கிறோம்.

கிரிக்கெட், சினிமா மட்டுமில்லை, சுயதொழில் செய்வது, வித்தியாசமாகச் சிந்திப்பது, கண்டுபிடிப்பது, கலைத்துறைகளில் திறமையோடிருப்பது எனப் பல தளங்களிலும் நம்முடைய இந்த வேடிக்கையான செயல்கள் வாடிக்கையாகிவிட்டன. இவையும், நம் வீட்டுப் பிள்ளைகளிடம், இன்றைய இளம் தலைமுறையினரிடம் மட்டும்தான் என்றில்லை. எனக்குத் தெரிந்த ஒரு நண்பர், சென்னையில் வசிக்கிறார். அவருக்கு சுமார் 35 வயது இருக்கும். கடந்த 10 ஆண்டுகளாகத் தொழில் செய்து வருகிறார். பல்வேறு பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக, தொழிலில் பல்வேறு பிரச்சனைகள். எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் இல்லை. வருமானம் குறைந்து விட்டதே தவிர, நட்டம் ஏதும் இல்லை. ஆனாலும், வீட்டாரின் தொல்லை தாங்க முடியாமல், தற்போது, சுயதொழிலை விட்டுவிட்டு, ஒரு நிறுவனத்தில் வேலைக்குப் போகின்றார். குடும்பத்திற்காக இதைச் செய்தாலும், மனதளவில் அவரால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இதில் வியத்தகு செய்தி என்னவென்றால், அவரது குடும்பம் ஒன்றும் பொருளாதார ரீதியாக எந்தப் பிரச்சனையிலும் இல்லை. அப்படியிருந்தும், தொழில் செய்து பத்தாயிரம் ரூபாய் ஈட்டுவதை விட, ஏதாவது ஒரு வேலைக்குச் சென்று, குறைவான சம்பளம் பெற்றாலும் சரி என்பதுதான் அவரது குடும்பத்தினரின் நம்பிக்கை மற்றும் வாதம்.

இந்த மனோபாவம், மேற்சொன்ன ஒரு நண்பரின் குடும்பத்தில் மட்டுமல்ல, பெரும்பாலான தமிழர்களிடையே உள்ளது. வேலைக்குப் போவதையே, இன்னும் சிறப்பாகச் சொன்னால், அரசாங்க வேலைக்குப் போவதையே வாழ்க்கையில் “செட்டில்” ஆவது என்று சொல்லும் வழக்கம் இன்றும் நம்மிடையே உள்ளது. எனக்கு ரொம்ப நாளாக விடை தெரியாத பல கேள்விகளில், முக்கியமான ஒன்று – “செட்டில்” ஆவது என்றால் என்ன? – யோசி...!

கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம் நடத்தி வரும் என் நண்பர் ஒருவருக்கு, நீண்ட நாட்களாகத், திருமணத்திற்குப் பெண் கிடைக்கவில்லை. அதற்கு அவரது பெற்றோர் சொல்லும் காரணம்தான் என்னை வியக்க வைக்கிறது. அந்தக் காரணம் - “அவர் வேலைக்குச் செல்லாமல் தொழில் செய்வதுதான். நீ மட்டும் வேலைக்குப் போ. அடுத்த மாதமே உனக்குத் திருமணம் நடந்துவிடும்” என்று. எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் நாம்? ஒரு கட்டத்தில், மாப்பிள்ளையின் வேலை மற்றும் சம்பளத்திற்கேற்ப வரதட்சணைப் பிச்சை பெற்றுக் கொண்டிருந்தோம். பிறகு, கம்ப்யூட்டர் கம்பெனிகளில் பணிபுரிபவர்களுக்கும், வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்கும் முன்னுரிமை அளித்து வந்தோம். இன்னும் கொஞ்ச காலத்தில், வேலைக்கு ஆள் எடுக்கும் போது நிர்ணயிக்கும் தகுதிகள் போலத், திருமணத்திற்கும் இந்த இந்த வேலையில் இருப்பவர்கள் மட்டுமே செய்ய முடியும் என்ற நிலை வரும் போல.

உஸ்... இப்பவே கண்ணைக் கட்டுதே...!

இதற்கெல்லாம் காரணம், ரிஸ்க்கே இல்லாமல் வாழ எண்ணும் நம் பாதுகாப்பு மனப்பான்மையா...? அல்லது, நம் மனதிற்குள்ளே ஊற்றிவிடப்பட்ட, தற்போது நம் மனமெல்லாம் ஊறிவிட்ட அடிமை மனப்பான்மையா...? அல்லது ஊரோடு ஒத்து வாழ்கிறேன் என்ற பேரில் முளைத்திருக்கும், மற்றவர்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் மனப்பான்மையா..? – யோசி...!

தமிழகத்தின் எந்த ஊருக்கு, நான் பயிற்சி அளிக்கப் போனாலும், பெற்றோர்களில் பெரும்பாலானோர் சொல்வது, தன் குழந்தையை டாக்டராகவோ, என்ஜினியர் ஆகவோ ஆக்க விரும்புவதைத்தான். எல்லோரும், டாக்டராகவும், என்ஜினியராகவும் மட்டுமே ஆக முயன்றால், இந்த உலகின் நிலை என்னவாகும்...? இதையே நான் என் மாணவர்களிடம் விளையாட்டாகக் கேட்பேன் - “எல்லோரும் டாக்டரானால், யார்தான் பேஷண்ட் ஆவது?” என்று. சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் கூட புதுமையான படிப்புகள், வேலை வாய்ப்புகள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை என்பது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. இன்றைய உலகில், ஆயிரக்கணக்கான துறைகளில் லட்சக்கணக்கான வாய்ப்புகள் உள்ளன, பணம் சம்பாதிப்பதற்கும், வாழ்க்கைத் தரத்தில் உயர்வதற்கும் மட்டுமல்ல, சமுதாயத்தை முன்னேற்றுவதற்கும்தான். அப்படியிருந்தும், ஒரு சிறிய வட்டத்தைப் போட்டுக்கொண்டு, அதுவேதான் சிறந்தது, பாதுகாப்பானது என்றெல்லாம் நம்பிக்கொண்டிருக்கும் நம்மைப் பற்றி நான் வேறென்ன சொல்வது... நாம் சராசரியாக மட்டுமே வாழ விரும்புகிறோம் என்பதைத் தவிர.

உங்களுக்குப் பிடித்த, நீங்கள் வியக்கும், பிரபலமான 100 சாதனையாளர்களை ஒரு பட்டியல் போடுங்கள். சத்தியமாக அதில் ஒரு சிலர் கூட, நீங்கள் வழக்கமாகப் பார்க்கும் “செட்டில்” ஆன நபர்களோ, அரசு அலுவலக குமாஸ்தாக்களோ, வழக்கமாக நம்மால் அதிகம் விரும்பப்படும் பணிகளைச் செய்பவர்களோ இருக்க மாட்டார்கள். அவர்களில் பெரும்பாலானோர், அரசியல்வாதிகளாக, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக, விளையாட்டு வீரர்களாக, விஞ்ஞானிகளாக மற்றும் தொழிலதிபர்களாகத்தான் இருப்பார்கள்.

இப்பொழுதேனும் சொல்லுங்கள். உலகின் 600 கோடிக்கும் அதிகமான மக்களோடு மக்களாக நீங்கள் சராசரி வாழ்வில் கரைந்து போகப் போகிறீர்களா...? அல்லது, நம்மை விமர்சிப்பவர்கள் குறித்துக் கவலை கொள்ளாது, வித்தியாசமாக முயற்சி செய்து, உலகமே வியந்து போற்றும் ... குறைந்த பட்சம் உள்ளுராவது வியந்து போற்றும் சாதனையாளராகப் போகிறீர்களா...? – யோசி...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக