வெள்ளி, 26 மார்ச், 2010

தோற்க – கற்க!


பெற்றுக்கொள்ள மட்டுமா... கற்றுக்கொள்ளவும்தான் வாழ்க்கை!

தோல்வி பெற்றால்...

 நான் தோற்றவன் என்று பொருள் அல்ல
நான் இன்னும் வெற்றி பெறவில்லை என்றுதான் பொருள்.

 நான் எதையும் சாதிக்கவில்லை என்று பொருள் அல்ல
நான் கற்றுக் கொண்டு இருக்கிறேன் என்றுதான் பொருள்.

 நான் முட்டாளாக இருந்திருக்கிறேன் என்று பொருள் அல்ல
நான் பரிசோதனைகளுக்குத் தயாராக உள்ளேன் என்றுதான் பொருள்.

 நான் அதிர்ஷ்டம் இல்லாதவன் என்று பொருள் அல்ல
நான் முயற்சிக்கும் துணிவு உள்ளவன் என்றுதான் பொருள்.

 என்னிடம் எந்தத் தகுதியும் இல்லை என்று பொருள் அல்ல
நான் புதிய ஒரு வழியில் முயற்சிக்க வேண்டும் என்றுதான் பொருள்.

 நான் தாழ்ந்தவன் என்று பொருள் அல்ல
நான் இன்னும் மேன்மையாக வாழ வேண்டும் என்றுதான் பொருள்.

 நான் என் வாழ்க்கையை வீணடித்துவிட்டேன் என்று பொருள் அல்ல
நான் மீண்டும் தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளது என்றுதான் பொருள்.

 நான் முயற்சியைக் கைவிட்டுவிட வேண்டும் என்று பொருள் அல்ல
நான் மேலும் கடினமாக முயற்சிக்க வேண்டும் என்பதுதான் பொருள்.

 என்னால் அதை அடையவே முடியாது என்று பொருள் அல்ல
எனக்கு இன்னும் பயிற்சி தேவை என்றுதான் பொருள்.

 என்னைக் கடவுள் கைவிட்டுவிட்டார் என்று பொருள் அல்ல
அவர் வேறொரு சிறந்த திட்டம் வைத்துள்ளார் என்றுதான் பொருள்.

-- எங்கோ ஆங்கிலத்தில் படித்ததின் தமிழ் ஆக்கம்

தமிழ்ப் புத்தாண்டு – தை 1-ஆ? சித்திரை 1-ஆ?

தமிழ்ப் புத்தாண்டை நாம் எந்த நாளில் கொண்டாட வேண்டும்? இதுதான் தற்போது நம்முன் நிற்கும் தமிழ் தொடர்பான மிகப்பெரிய விவாதம். இதுநாள் வரை, சித்திரை 1-ஆம் நாளை நாம் அனைவரும் தமிழ்ப்புத்தாண்டு என்று கொண்டாடி மகிழ்ந்து வந்தோம். தற்போதோ, அது ஆரியர் ஏற்படுத்திய மாயை. தமிழ்ப் புத்தாண்டு “தை 1” அன்றுதான் கொண்டாடப்பட வேண்டும் என்று பல தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர். தமிழக அரசும் அதை ஏற்று, நடைமுறைப்படுத்தியுள்ளது. ஆனால்… எது சரி? உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ள நிலையில், ஒவ்வொரு தமிழரும் இது குறித்துச் சிந்திக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். என்னுடைய கருத்தைப் பார்ப்பதற்கு முன், தமிழ்ப்புத்தாண்டு தை ஒன்றுதான் என்பதற்கு ஆதரவாக வெளியிடப்பட்டுள்ள சில கருத்துக்களைப் பார்ப்போம்.


 தமிழ் உலகில், தமிழ் ஆண்டு என்னும் பெயரில் வழக்கில் இருக்கின்ற, “பிரபவ” முதல் “அட்சய” வரை உள்ள 60 ஆண்டுகளின் பெயர்கள் தமிழ் இல்லை. அவை பற்சக்கர முறையில் இருப்பதால் 60 ஆண்டுகளுக்கு மேல் உள்ள காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாக இல்லை. அதற்கு வழங்கும் கதையானது, அறிவு, அறிவியல், தமிழ் மரபு, மாண்பு, பண்பு ஆகியவற்றுக்குப் பொருத்தமாக இல்லை.

 எனவே, தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921-ஆம் ஆண்டு, சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில், தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் தலைமையில் கூடி, இது குறித்து ஆராய்ந்தார்கள். பின்னர், திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது என்றும், அதையே தமிழ் ஆண்டு எனக்கொள்வது என்றும், திருவள்ளுவர் காலத்தை கி.மு. 31 எனக் கொள்வது என்றும், தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்றும் முடிவு செய்தார்கள்.

 திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை; இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். ஆங்கில ஆண்டுடன் 31 கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு ஆகும். உதாரணமாக, 2010 + 31 = 2041. எனவே, இந்த தை ஒன்று முதல் தொடங்கும் புத்தாண்டு, திருவள்ளுவர் ஆண்டு 2041 ஆகும். தமிழ்நாடு அரசு, இதை 1971 முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது.

 வாரத்தின் ஏழு நாட்களுக்கும் ஒவ்வொரு கிழமை என்று பெயரிட்டு அழைக்கிறோம். இந்த ஏழு கிழமைகளில் புதன், சனி தவிர மற்றவை தமிழ். அவற்றையும் தமிழ்ப் பெயரிட்டு வழங்குவோம். புதன் = அறிவன்; சனி = காரி.

என்னைப் பொறுத்த வரை, மேற்கூறியுள்ள விளக்கங்கள் கூட முழுமையானதாகப், பொருத்தமானதாக இல்லை. அப்படியே அவற்றை ஏற்றுக்கொண்டாலும் கூட, அவற்றை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன. ஒவ்வொரு தமிழனுக்கும் தமிழ்ப்பற்று அவசியம் என்பதில் இரண்டாவது கருத்து இல்லை. ஆனால், உண்மையிலேயே தமிழ்ப்பற்றின் காரணமாகத்தான் தமிழ்ப் புத்தாண்டு, தேதி மாற்றம் பெற்றுள்ளதா என்பது நாம் யோசிக்க வேண்டிய கேள்வி. பொதுவாக, அரசியல்வாதிகளுக்கு, நம்மை ஏமாற்றவும், திசை திருப்பவும், நம்முடைய உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு அறிவை மழுங்கச் செய்யவும், ஓட்டுப் பெறவும் மட்டுமே இதுவரை தமிழ் மொழிப்பற்றும், இனப்பற்றும் பயன்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட நிலையில் தமிழ்ப் புத்தாண்டு எந்த நாளில் கொண்டாட வேண்டும் என்பதை ஒரு சர்ச்சைப் பொருளாக்கி இருப்பது, சந்தேகத்தையும், வருத்தத்தையுமே உண்டாக்குகிறது.

தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழர்களின் ஒரு கொண்டாட்டம். அதை எந்த நாளில் கொண்டாட வேண்டும் என்பது அவர்களின் உரிமை. கொண்டாட்டங்களைப் பொறுத்த வரை, அவற்றின் உண்மை, பின்புலம் என்று ஆராய்வதை விட, மனிதர்களின் சுதந்திரத்திற்கே அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என நான் எண்ணுகிறேன். புத்தாண்டு என்பது ஒரு ஆண்டின் தொடக்கம் மட்டுமே ஆகும். அது தவிர அந்த நாளுக்கு வேறெந்த முக்கியத்துவமும் இல்லை என நான் கருதுகிறேன். தற்போது கொண்டாடப்படும் பல தினங்கள், வியாபார நோக்கில் உருவாக்கப்பட்டவை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அது போலத், தமிழ்ப் புத்தாண்டையும் அரசியலும், அதிகாரமும் உருவாக்கிய அல்லது மாற்றிய ஒருநாளாக இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. தமிழர்கள் எந்த நாளையும் புத்தாண்டாக முடிவு செய்யலாம். பொதுமக்கள் கருத்தறிய முயற்சித்து, அவர்களிடம் விளக்கி, அது குறித்து ஒரு பொதுக்கருத்து எட்டப்படலாம். ஆனால், அது மக்கள் கருத்தாக மாற்றப்பட வேண்டுமே தவிர, திணிக்கப்படல் ஆகாது. அப்படி ஒரு பொதுக்கருத்து எட்டப்படும் வரை, அவரவர் விருப்பப்படி, தை ஒன்றிலோ, சித்திரை ஒன்றிலோ புத்தாண்டைக் கொண்டாடிக் கொள்ளலாம் என்பது எனது தாழ்மையான ஆனால் உறுதியான கருத்தாகும்.

புதன், 24 மார்ச், 2010

மரணத்தை வென்றவன்




நீங்கள் எப்போதாவது மரணத்தை சந்தித்தித்து இருக்கிறீர்களா ? சரி விடுங்கள் வாழ்க்கையையாவது சந்தித்து இருக்கிறீர்களா ? என்ன கேள்வி இது? எல்லோரும் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறோம் என்கிறீர்களா?

நான் இல்லை என்கிறேன். இருப்பது வேறு. வாழ்வது வேறு. வாழ்கையை வாழ்ந்து பார்க்கவும் கொஞ்சம் ஆழ்ந்து பார்க்கவும் தான் இந்த தளமும், இந்த கட்டுரையும்.

எல்லோரையும் போல் எனக்கும் ஒரு ரோல் மாடல் உண்டு. அவர் பெயர் ARMSTRONG. அவரைத்தான் எனக்கு தெரியுமே என்கிறீர்களா? ஆனால் நீங்கள் நினைப்பவர் - நிலவில் முதலில் கால் வைத்த Neil Armstrong. நான் சொல்வது Lance Armstrong. யார் அவர்?


யார் இந்த லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்? அமெரிக்காவைச் சார்ந்த ஒரு சைக்கிள் பந்தய வீரர். நமக்குத் துன்பங்கள் வரும்போது எல்லாம், உலகத்திலேயே நாம்தான் அதிகம் கஷ்டப்படுவதாக நாம் எண்ணும்போதெல்லாம், இவரை ஒரு கணம் நினைத்தால் போதும். நம்பிக்கை ஊற்றெடுக்கும். வாழ்க்கையின் மீதான நம் பார்வை மாறும். புத்துணர்ச்சி பொங்கும். அப்படி என்ன செய்தார் இவர்...?

அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் பிறந்த லான்ஸிற்கு, பிறந்தது முதலே பிரச்சனைகள் தொடங்கிவிட்டன. இரண்டு வயதில் அப்பாவும் அம்மாவும் பிரிந்துவிட, அம்மாவுடனும் வளர்ப்புத் தந்தையுடனும் வளர்ந்த லான்ஸிற்கு, அவருடைய மணவாழ்க்கையும் சேர்த்து, குடும்ப வாழ்க்கை இறுதி வரை இனிமையாக அமையவே இல்லை.

இளமைக் காலத்தில் டிரையத்லான் (சைக்கிள், ஓட்டம் மற்றும் நீச்சல் - மூன்றும் சேர்ந்த போட்டி) வீரராக பல சாதனைகள் படைத்துக்கொண்டிருந்த லான்ஸின் முழுக்கவனமும், பின்னர், சைக்கிள் பந்தயத்தின் மீது திரும்பியது. வெற்றிகளும், தோல்விகளும் நிறையப் பார்த்த போதும், ஆர்ம்ஸ்ட்ராங்கின் ஆசையெல்லாம், டூர் டி பிரான்ஸ் பந்தயத்தில் வென்றுவிட வேண்டும் என்பதாகவே இருந்தது.

முதலில் டூர் டி பிரான்ஸ் பந்தயத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்! உலகின் மிகக் கடினமான பந்தயங்களுள் ஒன்று அது. ஆண்டுதோறும் ஜலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், பிரான்ஸ் மற்றும் அதன் எல்லையோரங்களில், சுமார் 21 நாட்கள் நடைபெறும் அப்பந்தயத்தில் கடக்க வேண்டிய தூரம் சுமார் 3500 கிலோ மீட்டர்கள். பல்வேறு கட்டங்களாக நடைபெறும் அப்போட்டி, அழகிய நெடுஞ்சாலையில் நடைபெறுவதில்லை. சில கட்டங்கள் தொடர்ந்து புல்வெளியில், சில கட்டங்கள் தொடர்ந்து மேடு-பள்ளங்கள் நிறைந்த சாலையில், சில கட்டங்களோ மலைப்பகுதிகளில், என்று சைக்கிள் ஓட்டியாக வேண்டும். “உலகிலேயே அதிக உடல்திறன் தேவையான விளையாட்டுப் போட்டி” என்றும், போட்டியை முழுவதுமாக நிறைவுசெய்யத் தேவைப்படும் ஆற்றல் “மூன்று முறை எவரெஸ்ட் ஏறுவதற்கும், பல மராத்தான் ஓட்டப்பந்தயங்களுக்கும் இணையானது” என்றும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது. அவ்வளவு கடுமையான பந்தயத்தில் வெல்லத்தான் லட்சியம் கொண்டார் லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்.

அப்பொழுதுதான் அந்த விபரீதம் நேர்ந்தது! சைக்கிள் பயிற்சியின் போது தவறி விழுந்தார் லான்ஸ்! மருத்துவமனையில் அனுமதித்த சில நாட்களிலேயே கோமா நிலையை அடைந்தார்! காரணம், ஆர்ம்ஸ்ட்ராங்கிற்கு......... கேன்சர்! ஆம்! கொடுமையான புற்றுநோய், அவரது வாழ்க்கையையே புரட்டிப்போட்டது. அமெரிக்க மருத்துவர்களாலேயே, இவர் சில நாட்களில் இறந்து விடுவார் என்று கணிக்கப்பட்டார்!

இந்த நிலையில் தான், ஒரு நாள், சில நிமிடங்கள் ஆர்ம்ஸ்ட்ராங்கிற்கு, நினைவு திரும்பியது. கோமா நிலையில் இருந்த எந்த ஒரு நோயாளியானாலும், நினைவு வந்தவுடன் தன் உறவினர்களைத்தான் தேடுவார் அல்லவா! ஆனால், நம் ஆர்ம்ஸ்ட்ராங்கோ, “டாக்டர்! என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்! நான் இறப்பது குறித்துக் கவலை கொள்ளவில்லை. ஆனால், ஒரே ஒரு முறையேனும், டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தில் வெற்றி பெற்ற பின்னர்தான் நான் இறக்க வேண்டும்” என்றார். என்ன மனிதர் இவர்! மனதிற்குள் எத்தனை லட்சிய வெறி! என்று வியந்த மருத்துவர்கள், அவரை எப்படியாவது காப்பாற்றி விட முனைந்தனர்.

ஆனால் அது அவ்வளவு சுலபமானதாக அமையவில்லை. முழு குணமடைவதற்குள் அவர் பட்ட வேதனைகள் ஏராளம்! கீமொதெரபி என்னும் மிகவும் கடுமையான சிகிச்சை பல முறை அவருக்கு அளிக்கப்பட்டது! மூளையில் கட்டி வேறு ஏற்பட்டு, அதற்கும் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இவை போதாதென்று, தீவிரமான சிகிச்சைகளின் பக்க விளைவாக, நுரையீரலில் அடைப்பு, சிறுநீரகம் பழுது, பக்கவாதம் மற்றும் ஹார்ட் அட்டாக் என்று ஒரு மனிதன் சந்திக்கவே கூடாத அத்தனை பிரச்சனைகளையும், மொத்தமாக சந்தித்தார் ஆர்ம்ஸ்ட்ராங்! இத்தனைக்கும் பிறகு, இறைவன் அருளால், ஆர்ம்ஸ்ட்ராங்கின் லட்சிய வெறியால், உயிர் பிழைத்தார்!

உயிர் பிழைத்தாலும் கூட, இவரால் சைக்கிள் பந்தயத்தில் இனி பங்கேற்கவே முடியாது என்றுதான் உலகம் நினைத்தது! நினைத்ததோடு மட்டுமில்லை, தேசிய அணியில் இடம் கொடுக்காமல், அவரது இதயத்தில் இடியை இறக்கியது! எண்ணிப் பாருங்கள், ஒரு புகழ்பெற்ற வீரருக்கு, எவ்வளவு பெரிய அவமானம் இது!

ஆனால், ஆர்ம்ஸ்ட்ராங் மனம் தளரவில்லை! கடுமையாகப் பயிற்சி செய்தார்! தொடர்ந்து உழைத்தார்! நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்! மிக நல்ல உடல்நிலையோடு இருக்கும் ஒருவரால், ஒருமுறை வெல்வதே கடினம் என்று நம்பப்படும் டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தில், ஒரு முறை அல்ல, இருமுறை அல்ல, தொடர்ச்சியாக ஏழு முறை (1999 – 2005) வென்று உலக சாதனை படைத்தார்.

செப்டம்பர் 18, 1971-ல் பிறந்து, தற்போது 39-ஆவது வயதில், உலகின் நம்பிக்கை நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஆர்ம்ஸ்ட்ராங், உலகெங்கும் கேன்சர் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டும், அதற்காக நிதி திரட்டிக் கொண்டும் சமுதாய சேவை செய்து வருகிறார் என்றால்.........................

எண்ணிப் பாருங்கள் அன்பர்களே!

“என்னடா! துன்பம் அதை எட்டி உதை, வாழ்ந்து பார்! எப்போதும் உன்னை நம்பி!
இடுகாடு போனபின் நடுவீடு அழைக்குமோ? ஏறி விளையாடு தம்பி!”

என்ற வரிகளுக்கேற்ப, நம்முடைய பிரச்சனைகளை எல்லாம் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்! வெற்றியும், மகிழ்ச்சியும் நிச்சயம்! அடுத்த கட்டுரையில் சந்திப்போம்! அதுவரை ஆர்ம்ஸ்ட்ராங் குறித்தே சிந்திப்போம்!
-- இக்கட்டுரை "நமது நம்பிக்கை" மார்ச் 2010 இதழில் வெளியாகி உள்ளது