வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

உடுப்பும், துடுப்பும்..!

சென்ற வாரம், சர்வதேச நட்பு தினத்தை முன்னிட்டு சிறிய கட்டுரை ஒன்றை எழுதியிருந்தேன். நண்பர்கள் குறித்த சில நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதாக, அதில் கூறியிருந்தேன். அதையொட்டியே இக்கட்டுரை.

நண்பர்களோடு எத்தனை நாள், எத்தனை நேரம் பேசிக்கொண்டிருந்தாலும், உண்மையிலேயே நேரம் போவது தெரியாது. அதிலும் “ஓல்டு இஸ் கோல்டு” என்பது, நிச்சயம் நட்புக்குப் பொருந்தும். தினந்தோறும் நாம் ஏராளமான நபர்களைச் சந்திக்கிறோம். அவ்வப்போது, பல புதிய நண்பர்களைப் பெறுகிறோம். ஆனால், நீண்ட காலமாக ஒருவர் நண்பராக இருக்கும் பட்சத்தில்தான், அதன் இனிமையும், வலிமையும் கூடுகிறது.

நண்பர்கள் கூட்டம் என்று சொன்னாலே, எனக்கு, சில ஆண்டுகளுக்கு முன் நான் பணிபுரிந்த, டிஎம்சி கம்ப்யூட்டர் சென்டரில் நடந்த கூட்டங்கள்தான் நினைவுக்கு வரும். அங்கே ஒன்றாகப் பணிபுரிந்தவர்களில் சிலர் மட்டும், மாதந்தோறும் ஒரு சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை மாலை கூடிப் பேசி மகிழ்வோம். ஆண், பெண் இருபாலரும் கலந்த சுமார் 6 முதல் 8 நண்பர்களின் இனிமையான அந்த சந்திப்பு, சுமார் ஓராண்டு காலம் தொடர்ந்தது. முதல் கூட்டத்தின் போது, அதை ஏற்பாடு செய்த, திருமதி. உமாசெல்வி (இப்போதும் தொடர்பில் உள்ள நல்ல தோழி) அவர்களை, நான் கூடக் கிண்டல் செய்தேன், “நாம்தான் தினந்தோறும் வேலைநேரத்தில் சந்திக்கிறோமே! தனியாக இந்தக் கூட்டம் வேறு எதற்கு?” என்று. ஆனால், தற்போது, அந்த நினைவுகள் நெஞ்சில் ஒரு இனிமையான தாக்கத்தையும், நண்பர்களுடன் பேசி அளவளாவ, அதுபோல், பின்னர் ஒரு வாய்ப்புக் கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தையும் தந்து கொண்டிருக்கிறது. இன்றும், அவர்களில் பலரோடும் நல்ல தொடர்பு இருக்கிறது.

இந்தக் கட்டுரையைக் காரணமாக்கி, என் வாழ்வில் நான் பெற்ற நண்பர்களை, நண்பர்களால் கிடைத்த அனுபவங்களைக், கடந்த சில நாட்களாக எண்ணிப் பார்த்தேன். அத்தனையையும் எழுதுவது என்றால், ஒரு மிகப்பெரிய புத்தகமே தயார் செய்து விடலாம். அந்த அளவிற்கு என் மொத்த வாழ்க்கை அனுபவங்களில் நண்பர்களின் பங்கு மிகப் பெரியது. எனக்கு, சகோதர உறவென்று நான் அதிகம் யாரையும் நினைப்பதில்லை. அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என்றெல்லாம் நினைப்பதை விட, நண்பர்களாகப் பழகுவதையே விரும்புகிறேன். ஏனென்றால் நான், நட்பின் மதிப்பும், பெருமையும், புனிதமும் நன்கு உணர்ந்தவன். என் வயதினரை மட்டுமல்லாது, மிக உயர்ந்த வி.ஐ.பி-க்கள், என் மாணவர்கள் என எல்லோரையும் நண்பர்களாகவே பார்க்கும் பழக்கம் கொண்டவன் நான். ஆனால், யாரையும் எளிதில் என்னை நெருங்கவிட மாட்டேன். அதனால்தான், எனக்கு நண்பர்கள் அதிகம். ஆனால், நெருங்கிய நண்பர்கள் குறைவு. தோழர்கள் (“உயிர் காப்பான் தோழன்”) என்று யாரும் இல்லை.

எல்லோரையும் போல எனக்கும்தான், எத்தனை விதமான நண்பர்கள்! இந்த உலகில் என் முதல் மற்றும் மிக நெருங்கிய நட்பாக நான் நம்பும் என் அம்மா, நான் தொடர்ந்து பள்ளி செல்வதற்கே காரணமாக இருந்த என் வாழ்வின் முதல் வகுப்பு நண்பர்கள் சரவணகுமார் மற்றும் சதீஷ். இரண்டாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை நான் உயிர் என்று கொண்டாடிய நண்பன் மாரிமுத்து. என் சென்னைப் பயணங்களின் போதெல்லாம் எனக்கு உதவிய பரணி. என்னோடு ஒரே வகுப்பில் ஒன்றாய்ப் படித்து, நீண்ட காலம் தொடர்பில்லாமல் இருந்த போது, கனவில் நான் கண்ட அதே முறையில், அதே இடத்தில் மீண்டும் சந்தித்த நண்பன் சுந்தர். என்னைத் துரத்தித், துரத்தி நண்பனாகி, இன்றும் என் வாழ்வில் நெருங்கிய நண்பனாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் ராஜா. மாமா பெண்ணாக இருந்தாலும், தோழியாகவே நான் எப்போதும் காணும் ஸ்ரீவித்யா. ஒன்றாகவே படித்திருந்தாலும், பெங்களுரில் வேலைக்குச் சென்ற பின், கடிதம் மூலமாக நெருங்கிய நண்பனான சதீஷ். எனது நிறுவனத்தை இடம்மாற்ற எண்ணிய போது, தானாகவே முன்வந்து உதவிய நண்பர் சுந்தரராமன். செய்த தொழிலால் பழகிப், பின் அதையும் தாண்டிய தனித்துவமான நட்பாக வளர்ந்த நண்பர்கள் ரகுபதி மற்றும் ராஜேஷ். ஒன்றாகப் பணிபுரிந்து, தற்போது புதுக்கோட்டை முழுவதும், எங்கள் இருவரையும் ஒன்றாகவே எண்ணுமளவிற்கு, என் வாழ்வோடு ஒன்றிவிட்ட நெருங்கிய நண்பர் ஸ்ரீராம். என் மீது அதிக அக்கறையும், மதிப்பும் கொண்ட என் மாணவ நண்பர்கள் அருண்பிரசாத் மற்றும் ஹிஷாம்... இன்னும்... இன்னும்... (பெயர் விடுபட்ட என் நண்பர்கள் என்னை மன்னிக்கவும். எழுதுகிற சில நிமிடங்களில் நினைவு வந்த சிலரை மட்டும் எழுதியுள்ளேன்)

இன்னும் ஏராளமான பெயர்கள் என் நெஞ்சில் விழுந்து கொண்டேயிருக்கிறது. வார்த்தைகளில் இங்கே அவர்கள் பெயரெல்லாம் விழாததற்குக் காரணம், எழுதுகின்ற எனக்கு இனிமையாக இருந்தாலும், படிக்கின்ற உங்களுக்குக் கசந்து விடக் கூடாது என்பதனால்தான்.

நான் என் நண்பர்கள் பலருக்குப் பல உதவிகளைச் செய்திருக்கிறேன். சராசரியாக எல்லோரும் செய்யும் சாதாரண உதவிகள் முதல், சிலருக்கு தேர்வில் வெற்றி பெற, சிலருக்கு தற்கொலை எண்ணத்தை மாற்ற, இன்னும் சிலருக்கு வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளை எடுக்க, இன்னும் எத்தனையோ விதங்களில்... அதே வேளையில், எனக்கு என் நண்பர்கள் செய்த சிறு உதவிகளையும் மறக்காமல் இருக்கிறேன்.

பாரதியார், கண்ணன் பாட்டில், கண்ணனைத் தன் தோழனாக எண்ணிக் கூறும் சில வரிகள், நட்புக்கு இலக்கணம் வகுப்பதாய் நான் நம்புகிறேன். அதையெல்லாம் பின்பற்றி வாழ்ந்திடவே முயன்று வருகிறேன். அதனால்தான், ஒன்றில் மட்டும் நான் தெளிவாக இருக்கிறேன். நண்பர்களை இழந்தாலும் பரவாயில்லை. அவர்கள் நலனை மட்டும்தான் நாட வேண்டும். அதன் மூலம் நட்பு எப்போதும் வாழ வேண்டும்.

வள்ளுவர் சொன்ன எல்லாக் குறள்களையும் என்னால் பின்பற்ற முடியவில்லை என்றாலும் கூட, பல குறள்களை முறையாகப் பின்பற்றி வருகிறேன். “காலத்தினால் செய்த உதவி”-களின் அருமையை அறிந்து, நன்றியுணர்வோடு வாழ்கிறேன். குறிப்பாக, நட்பு பற்றி சொன்ன பல குறள்கள் என் வாழ்வில் முக்கியமானவை. “நகுதற் பொருட்டன்று நட்டல்” என்று நட்பை இழந்தாலும், என் நண்பர்களின் நன்மையையே கருதி வந்துள்ளேன். நண்பர்களை அளப்பதற்கு, என் வாழ்விலும் “கேட்டினும் உண்டோர் உறுதி” என்று பலமுறை வியந்துள்ளேன்.

தேவை என்னும் போது மட்டும் என்னைத் தொடர்பு கொள்ளும் சிலரும், எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள். “உறுவது சீர்தூக்கும்” நண்பர்கள் பலரையும் நான் கண்டுள்ளேன். இப்போதும் நட்பாகக் கொண்டுள்ளேன். என் அம்மா கூட சொல்வார், “அவர்கள் உன்னைப் பயன்படுத்திக் கொண்டு, காரியம் முடிந்ததும் மறந்து விடுவார்கள்” என்று. நான் எப்போதும் சொல்வேன் - “மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள எல்லோரும் வருவார்கள். ஆனால், ஒரு பிரச்சனை, துன்பம் என்று வரும்போது, அவர்களுக்கு என் நினைவு வருகிறது என்றால், நான் சிறந்த நண்பனாக இருக்கிறேன் என்றுதானே பொருள். தேவைக்காகவாவது என்னைத் தேடினால் போதும். அப்போதும், நண்பர்களுக்கு உதவுவதை விட வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும்” என்று.

“உடுக்கை இழந்தவன் கைபோல்” உதவிய பல நண்பர்களை, என் வாழ்வில் பெற்றிருக்கிறேன். நானும் அவ்வாறே வாழ்ந்திருக்கிறேன். அதனால் உங்களுக்கு ஒரு வேண்டுகோள்! உடுப்பைப் போன்று நம் மானம் காக்கவும், துடுப்பைப் போன்று நம் வாழ்வைக் காக்கவும் செய்பவர்கள் நண்பர்கள்தான். தேவை முடிந்ததும் உடுப்பையும், துடுப்பையும் போல, நண்பர்களையும் தூர எறிந்து விடாதீர்கள். வாழ்வு பயனற்றதாக, மகிழ்ச்சியற்றதாக மாறிவிடும். நல்ல நண்பர்களோடு செலவிடும் நேரமே, வாழ்வின் அதி உன்னதமான நேரமாக நான் எண்ணுகிறேன். பணம் தேடும் பணிகளைக் கூட விடுத்து, நண்பர்களின் மகிழ்ச்சியான வாழ்விற்காக நேரம் செலவிடவே விரும்புகிறேன்.

ஏனென்றால், “இந்த உலகின் மிகப்பெரும் ஏழை - நண்பன் இல்லாதவன்” என்ற திரைப்படப் பாடல் வரியை நான் நம்புகிறேன். நீங்களும் நம்புங்கள்! நட்பினை வளருங்கள்!