செவ்வாய், 5 நவம்பர், 2013

யோசி மாத இதழ்


நண்பர்களே..! 

வரும் டிசம்பர் 2013 முதல்> ஒரு புதிய பத்திரிக்கையை, மாத இதழாக வெளிக்கொணரத் திட்டமிட்டுள்ளோம். ஆண்டு சந்தா ரூ. 300 மட்டுமே..! தங்கள் ஆதரவை வேண்டுகிறோம்..! விவரங்களுக்கு அழைக்கவும் 98429 30459.

இந்த இதழ் எதற்காக, யாருக்காக..? இதன் மூலம் என்ன சாதிக்க விரும்புகிறோம்..? போன்ற கேள்விகளுக்குப் பதிலாக வர உள்ள,; முதல் இதழின் தலையங்கம்... உங்கள் பார்வைக்கு இப்போதே...

யோசி..!
சிந்தனையை செம்மையாக்க...
உள்ளங்களை வெண்மையாக்க...
பாரதத்தைப் பசுமையாக்க...

யோசி..! - இது,
பேருக்கான இதழ் அல்ல..!
எல்லா ஊருக்கான இதழ்..!
தமிழ் அறிந்த பாருக்கான இதழ்..!

இது கட்சி சார்ந்தது அல்ல...
காட்சி சார்ந்தது..!
மனிதர்களின் நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும்
மாறாமல் காக்கும் மீட்சி சார்ந்தது..!

இது மதம் தருவது அல்ல...
மாதம் தோறும் வருவது..!
இம்மாதம் மட்டுமல்ல...
எந்நாளும் பயன் தரும் வேதமென உரியது..!

எங்கள் இதழ்,
உங்களை மாற்றி யோசிக்கச் சொல்லும்
மற்றுமொரு "மாறுபட்ட" இதழ் அல்ல...
சீர்கேடுகளை மாற்ற, யோசிக்கச் சொல்லி,
"நேர்நிற்கும்" மகத்தான இதழ்..!

இது,
எங்கள் இதழா..? ஆம்.
உங்கள் இதழா..? ஆமாம்..!
அப்படியானால்,
நம் இதழா..? ஆமாம்... ஆமாம்..!

..?!..    ..?!..     ..?!..

பயப்படாதீர்கள்..!
இது, மயக்கம் தரும் இதழ்க் கலப்பு அல்ல...
விழிப்புணர்வு தரும் இதயக் கலப்பு..!

சித்திரம் படைக்கும் வண்ணக் கலப்பு அல்ல...
சரித்திரம் படைக்கும் எண்ணக் கலப்பு..!

இங்கே,
சலசலப்பு இல்லை... கலகலப்பு உண்டு..!
ஏமாற்றும் பளபளப்பு இல்லை... 
ஏற்றிவிடும் பரிமளிப்பு உண்டு..!

எதற்கும், யாருக்கும், எப்போதும்,
வெலவெலப்பு  இல்லை... வெல்லும் நட்பு உண்டு..!
எதையும் சாதிக்காத வெறும்
வாயளப்பு இல்லை... வாய்மையளிப்பு மட்டுமே..!

இது,
யாரையும் புண்படுத்தும் இதழ் அல்ல...
இளைஞர்களைப் பண்படுத்தும் இதழ்..!

யார் இளைஞர்கள்..?
வயது என்றால்...
14 முதல் 40 வரை..!
மனது என்றால்...
கற்கும் ஆர்வமும், ரசனையும்..!

ஏன் இளைஞர்கள்..?
இரண்டு காரணங்கள்...
ஒன்று... எங்கள் இனம் - எங்களால் முடியும்..!
இரண்டு... எதிர்கால மனம் - ஒரு நாள் விடியும்..!

பண்படுத்த முடியுமா உம்மால்..?
ஏர்க் கலப்பை கொண்டு மண்ணை உழலாம்...
என்ன கலப்பை கொண்டு என்னை உழுவீர்..?
இது இளைஞர்களின் கேள்வி.

எழுத்தைக் கருவியாக்கி உங்கள் எண்ணம் உழுவோம்..!
உயரும் பயன்மரமாக்க, உரமாய் விழுவோம்..!
தோளில் கைபோட்டு, அக்கறையாய்த் தொழுவோம்..!
தேவை ஏற்பட்டால், விஸ்வரூபமாய் எழுவோம்..!
இது எங்கள் பதில் அல்ல - வேள்வி..!