வெள்ளி, 16 ஜூலை, 2010

விந்தை மனிதர்கள் - 2

தவறுகள் சரியாகுமா...?

நான் உலக அளவிலான பிரச்சனைகளை விட உள்ள அளவிலான பிரச்சனைகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிப்பேன். ஏனென்றால் என்னைப் பொறுத்தவரை, நம் உள்ளம், உள்ளபடியே மாறினால் மட்டுமே, எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு வருமென்று, தீர்க்கமாக நம்புகிறேன்.

எல்லாத் தவறுகளும், தப்புகளும் சரியாக வேண்டும் என்றே நாம் அனைவரும் விரும்புகிறோம். ஆனால், இன்றைய உலகில் நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் தெரியுமா? தவறுகளைத் திருத்தி சரிசெய்வதை விட்டுவிட்டு, தவறான நடத்தைகளையே, சரியான நடத்தைகளாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். இதை விட அவலம் வேறென்ன? – யோசி!

“தவறு என்பது தவறிச் செய்வது. தப்பு என்பது தெரிந்து செய்வது.
தவறு செய்தவன் திருந்தப் பார்க்கனும். தப்பு செய்பவன் வருந்தியாகனும்”

என்ற பழைய பாடல் எனக்கு நினைவுக்கு வருகிறது. நான் தப்பு, தவறு, குற்றம் என்று வார்த்தைச் சிக்கல்களுக்குள் நுழையவில்லை. தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும்... அதைச் சரிசெய்ய முயற்சிக்க வேண்டும். சரி செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை. அதற்காக வருந்த வேண்டும். உரிய தண்டனையை அனுபவிக்க வேண்டும். மீண்டும் அந்தத் தவறைச் செய்யாமல் இருக்க வேண்டும்.

இதையெல்லாம் செய்யாமல் விடுவதே சரியல்ல என்ற நிலையில், அவற்றை நியாயப்படுத்த முயற்சித்தோம் என்றால், பிறகு எப்படி, எல்லாம் சரியாகும்...?

முன்னொரு காலத்தில் எதையெல்லாம் தவறு என்று சொல்லிக் கொண்டிருந்தோமோ, அதையெல்லாம் சரியென்று அறியவும், தெரியவும், உணரவும்... சொல்லப் போனால், நம்பவே தொடங்கிவிட்டோம். பள்ளிக் கூடத்திற்கு கட் அடிப்பது, பெண்களை சைட் அடிப்பது, நீலப்படங்கள் பார்ப்பது, கெட்ட வார்த்தைகள், ஆபாசமான நடவடிக்கைகள், இரட்டை அர்த்த வசனங்கள், நமது உடலழகை எல்லாருக்கும் வெளிச்சமிட்டுக் காட்டுவது, வன்முறையில் ஈடுபடுவது, இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். பூமியின் தோற்றத்தில் வேண்டுமானால், தவறு சரியாகலாம். நம் வாழ்க்கை முறையிலும், நம் குணங்களிலும் எப்படி தவறுகள் சரியாக மாறும்...?

ஆபாசமான படங்களை முழுவதும் வெளியிட்டுவிட்டு, சமூக அவலங்களைப் பதிவு செய்வதாக நியாயப்படுத்தும் பத்திரிக்கைகள்...

பொறுக்கிகளையும், ரௌடிகளையும் கதாநாயகக் கதாபாத்திரங்களாக்கிவிட்டு, யதார்த்தத்தையே காட்டுவதாக நியாயப்படுத்தும் சினிமாக்கள்...

வன்முறையையும், ஆபாசத்தையும், அருவெறுப்புகளையும் நம் வீட்டின் வரவேற்பறைக்கே கொண்டுவரும் தொலைக்காட்சி சேனல்கள்...

இவையெல்லாம், இந்த எண்ணங்கள் நம்மில் வேரூன்ற, வளர, பரவ முக்கியக் காரணம்.

பல ஆண்டுகளுக்கு முன், ஒரு பத்திரிக்கையில் ஒரு கேள்வி – பதில்.

கேள்வி: சாதாரணப் படத்திற்கும், “ஏ” படத்திற்கும் என்ன வித்தியாசம்?
பதில்: சாதாரணப் படங்களைக் குடும்பத்தோடு சென்று பார்ப்பார்கள். “ஏ” படங்களைக், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும், தனித்தனியே சென்று பார்ப்பார்கள்.

இந்த பதிலில், ஏன் சேர்ந்து போய் “ஏ” படங்களைப் பார்க்க மாட்டார்கள் என்ற கருத்தை மட்டும் யோசியுங்கள். ஏனென்றால், அது தவறு என்று நினைத்தனர். அதனால், மனங்கெட்டவர்களும், மானங்கெட்டவர்களும் மிகக் குறைவாக இருந்தனர். ஆனால் இன்று, ஆறாம் வகுப்புப் படிக்கும் சிறுவர்கள் கூட, ஆளுக்கு ஐந்து ரூபாய் போட்டு, இன்டர்நெட்டில், ஆபாசப்படங்களைச் சேர்ந்து பார்க்கின்றனர். அதன் மோசமான விளைவுகளைப் பற்றி நான் விளக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

தவறுகளைத், தவறு என்று கருதும் வரை, அவற்றைச் செய்ய எல்லோரும் பயப்படுவர். தயங்குவர். மறைந்தும், ஒளிந்தும் செய்வர். மாட்டிக் கொண்டால் தண்டனையும், அவமானமும் அடைவர். அதனால் வருந்துவர். பின் திருந்துவர். இந்தக் காரணங்களால், தவறுகள் குறைவாக இருக்கும். ஆனால், இப்போது நடப்பது என்ன?


நாம் ஏதோ ஒன்றை நினைக்கவும், பேசவும், செய்யவும் நாம் பெற்றிருக்கும் உரிமையையே அதிகாரம் என்கிறோம். ஆனால் நாம், நம் அதிகாரத்தை முறையாகப் பயன்படுத்துகிறோமா..? அதிகாரத்தை நிலைநிறுத்தத் தேவையில்லாமல் தன் பலத்தைப் பிரயோகிப்பது... ஏதோ அமெரிக்கா மட்டும்தான் என்று எண்ணிவிடாதீர்கள்... நம்மில் பலருந்தான். நாம் எல்லோரும் அதிகாரத்தைத் தவறாகவே பயன்படுத்தி வருகிறோம். திருக்குறளில் வரும் அதிகாரங்கள் உட்பட... குறிப்பாக, நான் குறிப்பிட விரும்புவது, தவறுகளை சரியானதாக்கிக் கொண்டிருக்கும் நம் எதேச்சாதிகாரத்தை.

மிகச் சாதாரண அளவில் ஒரு உதாரணம் சொல்கிறேன். ரயிலில் முன்பதிவு செய்பவர்கள் பயணிக்கும் பெட்டிகளில், முன்பதிவு செய்யாத ஒருவர் பயணம் செய்வதே குற்றம் என்று சட்டம் சொல்கிறது. இன்றைய சூழ்நிலையில், அவசரமும், மக்கட் பெருக்கமும் அதைச் சரியாகப் பின்பற்ற விடவில்லை. பரவாயில்லை. ஆனால், முன்பதிவு செய்யாத ஒருவர், முன்பதிவு செய்து முறையாக வருபவர்களுக்கு இடமளிக்காமல் தாம் அமர்ந்து கொள்வதும், இருக்கைகளை மாற்றச் சொல்வதும், அதிகாரம் செய்வதும், வம்புச் சண்டையிடுவதும்... அப்பப்பா... என்னால் தாங்கவே முடியவில்லை. தவறுகளை மனித உரிமைகளாக்கும் இவர்களை என்ன செய்வது...?

ரயில் சம்பவம் கூட ஒரு எளிமையான, சாதாரணமான உதாரணம்தான். ஆனால், இந்த சமூகத்தையே கெடுக்க வல்ல, கொடுந் தீங்கு இழைக்கக் கூடிய, மனித இனமே எண்ணி வெட்கித் தலைகுனியக் கூடிய, குற்றங்களை நியாயப்படுத்துகின்ற, பல மோசமான செயல்களை, நாம் எண்ணற்ற வேளைகளில், வேலைகளில், தொடர்ந்து செய்து வருகிறோம். அதுவும்... கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல்.

மனித சட்டங்கள், சமூக சட்டங்கள், அரசியல் சட்டங்கள் என்று எதையுமே நாம் மதிப்பதில்லை. சட்டங்கள் மீறப்படுவதை எந்த விதத்திலும் நியாயப்படுத்துவதை, நான் விரும்புவதில்லை. தவறான சட்டங்கள் கூட, அமைதியான வழியில், முறையாகத் திருத்தப்பட வேண்டுமேயன்றி, அதை முரட்டுத்தனமாக, அதுவும் சுயலாபத்துக்காக, மீறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதைவிடக் கொடுமை... சமீபத்தில், ஒரு இணையதளத்தில் ஒருவர் கட்டுரை எழுதியிருக்கிறார். லஞ்சம் வாங்குவதை சட்டமாக்கிவிடலாம் என்று. அதற்கு விரிவான விளக்கம் வேறு. சட்டத்தை மீறித் தவறு செய்யக் கூடாது என்பதற்காக, தவறுகள் அனைத்தையும் சட்டமாக்கிவிடும், முட்டாள்தனமான யோசனைகளைத் தயவு செய்து, குப்பையில் போடுங்கள். “இலக்கு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதை அடைவதற்கான வழிகளும்” என்ற காந்தியடிகளின் வார்த்தைகளின்படி, நாம் வாழ முற்பட வேண்டும். வெறும் சட்டங்களால் மட்டும் எதையும் சாதித்துவிட முடியாது என்பது எனக்கும் புரிகிறது. ஆனால், மக்கள் மனங்களை நல்வழியில் மாற்ற முயற்சிக்க வேண்டுமே தவிர, அதற்காக, தவறு செய்வதை சட்டமாக்கி, உரிமையாக்கி விடாதீர்கள்.

எல்லாக் குற்றங்களுக்குப் பின்னாலும் ஒரு காரணம் இருக்கும். அதற்காக, குற்றங்களை நியாயப்படுத்துவதை நிறுத்துவோம். எப்போதும் சரி எது என்பது பற்றியே யோசிப்போம். அதைச் சரியாகச் செய்வதை ஒன்றையே மூச்சாக சுவாசிப்போம். தவறுகள் ஒருபோதும் சரியானதாக்கப்படாமல் பார்த்துக்கொள்வோம். தவறுகள் செய்யாமல், மக்கள் அனைவரும் வாழ்வதற்கான வழிமுறைகளைப் பற்றி சிந்திப்போம். அவற்றை நடைமுறைப்படுத்த முயற்சிப்போம்.

என்றாவது ஒருநாள் நிச்சயம் விடியும்..! அதுவும் நம்மால் மட்டுமே முடியும்..!