வெள்ளி, 26 மார்ச், 2010

தமிழ்ப் புத்தாண்டு – தை 1-ஆ? சித்திரை 1-ஆ?

தமிழ்ப் புத்தாண்டை நாம் எந்த நாளில் கொண்டாட வேண்டும்? இதுதான் தற்போது நம்முன் நிற்கும் தமிழ் தொடர்பான மிகப்பெரிய விவாதம். இதுநாள் வரை, சித்திரை 1-ஆம் நாளை நாம் அனைவரும் தமிழ்ப்புத்தாண்டு என்று கொண்டாடி மகிழ்ந்து வந்தோம். தற்போதோ, அது ஆரியர் ஏற்படுத்திய மாயை. தமிழ்ப் புத்தாண்டு “தை 1” அன்றுதான் கொண்டாடப்பட வேண்டும் என்று பல தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர். தமிழக அரசும் அதை ஏற்று, நடைமுறைப்படுத்தியுள்ளது. ஆனால்… எது சரி? உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ள நிலையில், ஒவ்வொரு தமிழரும் இது குறித்துச் சிந்திக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். என்னுடைய கருத்தைப் பார்ப்பதற்கு முன், தமிழ்ப்புத்தாண்டு தை ஒன்றுதான் என்பதற்கு ஆதரவாக வெளியிடப்பட்டுள்ள சில கருத்துக்களைப் பார்ப்போம்.


 தமிழ் உலகில், தமிழ் ஆண்டு என்னும் பெயரில் வழக்கில் இருக்கின்ற, “பிரபவ” முதல் “அட்சய” வரை உள்ள 60 ஆண்டுகளின் பெயர்கள் தமிழ் இல்லை. அவை பற்சக்கர முறையில் இருப்பதால் 60 ஆண்டுகளுக்கு மேல் உள்ள காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாக இல்லை. அதற்கு வழங்கும் கதையானது, அறிவு, அறிவியல், தமிழ் மரபு, மாண்பு, பண்பு ஆகியவற்றுக்குப் பொருத்தமாக இல்லை.

 எனவே, தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921-ஆம் ஆண்டு, சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில், தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் தலைமையில் கூடி, இது குறித்து ஆராய்ந்தார்கள். பின்னர், திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது என்றும், அதையே தமிழ் ஆண்டு எனக்கொள்வது என்றும், திருவள்ளுவர் காலத்தை கி.மு. 31 எனக் கொள்வது என்றும், தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்றும் முடிவு செய்தார்கள்.

 திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை; இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். ஆங்கில ஆண்டுடன் 31 கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு ஆகும். உதாரணமாக, 2010 + 31 = 2041. எனவே, இந்த தை ஒன்று முதல் தொடங்கும் புத்தாண்டு, திருவள்ளுவர் ஆண்டு 2041 ஆகும். தமிழ்நாடு அரசு, இதை 1971 முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது.

 வாரத்தின் ஏழு நாட்களுக்கும் ஒவ்வொரு கிழமை என்று பெயரிட்டு அழைக்கிறோம். இந்த ஏழு கிழமைகளில் புதன், சனி தவிர மற்றவை தமிழ். அவற்றையும் தமிழ்ப் பெயரிட்டு வழங்குவோம். புதன் = அறிவன்; சனி = காரி.

என்னைப் பொறுத்த வரை, மேற்கூறியுள்ள விளக்கங்கள் கூட முழுமையானதாகப், பொருத்தமானதாக இல்லை. அப்படியே அவற்றை ஏற்றுக்கொண்டாலும் கூட, அவற்றை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன. ஒவ்வொரு தமிழனுக்கும் தமிழ்ப்பற்று அவசியம் என்பதில் இரண்டாவது கருத்து இல்லை. ஆனால், உண்மையிலேயே தமிழ்ப்பற்றின் காரணமாகத்தான் தமிழ்ப் புத்தாண்டு, தேதி மாற்றம் பெற்றுள்ளதா என்பது நாம் யோசிக்க வேண்டிய கேள்வி. பொதுவாக, அரசியல்வாதிகளுக்கு, நம்மை ஏமாற்றவும், திசை திருப்பவும், நம்முடைய உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு அறிவை மழுங்கச் செய்யவும், ஓட்டுப் பெறவும் மட்டுமே இதுவரை தமிழ் மொழிப்பற்றும், இனப்பற்றும் பயன்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட நிலையில் தமிழ்ப் புத்தாண்டு எந்த நாளில் கொண்டாட வேண்டும் என்பதை ஒரு சர்ச்சைப் பொருளாக்கி இருப்பது, சந்தேகத்தையும், வருத்தத்தையுமே உண்டாக்குகிறது.

தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழர்களின் ஒரு கொண்டாட்டம். அதை எந்த நாளில் கொண்டாட வேண்டும் என்பது அவர்களின் உரிமை. கொண்டாட்டங்களைப் பொறுத்த வரை, அவற்றின் உண்மை, பின்புலம் என்று ஆராய்வதை விட, மனிதர்களின் சுதந்திரத்திற்கே அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என நான் எண்ணுகிறேன். புத்தாண்டு என்பது ஒரு ஆண்டின் தொடக்கம் மட்டுமே ஆகும். அது தவிர அந்த நாளுக்கு வேறெந்த முக்கியத்துவமும் இல்லை என நான் கருதுகிறேன். தற்போது கொண்டாடப்படும் பல தினங்கள், வியாபார நோக்கில் உருவாக்கப்பட்டவை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அது போலத், தமிழ்ப் புத்தாண்டையும் அரசியலும், அதிகாரமும் உருவாக்கிய அல்லது மாற்றிய ஒருநாளாக இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. தமிழர்கள் எந்த நாளையும் புத்தாண்டாக முடிவு செய்யலாம். பொதுமக்கள் கருத்தறிய முயற்சித்து, அவர்களிடம் விளக்கி, அது குறித்து ஒரு பொதுக்கருத்து எட்டப்படலாம். ஆனால், அது மக்கள் கருத்தாக மாற்றப்பட வேண்டுமே தவிர, திணிக்கப்படல் ஆகாது. அப்படி ஒரு பொதுக்கருத்து எட்டப்படும் வரை, அவரவர் விருப்பப்படி, தை ஒன்றிலோ, சித்திரை ஒன்றிலோ புத்தாண்டைக் கொண்டாடிக் கொள்ளலாம் என்பது எனது தாழ்மையான ஆனால் உறுதியான கருத்தாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக